Kerala: திருமணத்துக்கு மதுபோதையில் வந்த மணமகன்.. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து!
திருமணம் என்பது இளம் வயதினர் அனைவருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும்.இதே திருமணங்கள் சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலும் அமைகிறது.
கேரளாவில் மதுபோதையில் மணமகன் ரகளை செய்ததால் திருமணம் நின்றதோடு, விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் என்பது இளம் வயதினர் அனைவருக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு விட்ட சமூகத்தில் எப்படியெல்லாம் வித்தியாசமாக திருமணம் செய்யலாம் என ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு தடபுடலாக திருமணங்கள் நடைபெறுகிறது. இதே திருமணங்கள் சிலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையிலும் அமைகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் பத்தினாம்திட்டா மாவட்டத்தில் கோழஞ்சேரி என்ற நகர் உள்ளது. இங்குள்ள தடியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள தேவாலயத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது. பெரும் கனவுகளோடு திருமண நாளில் தேவாலயத்துக்கு சென்ற மணப்பெண்ணுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
காரில் வந்திறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடியே மணமேடையை நோக்கி வந்ததை பார்த்த மணப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் அங்கிருந்த பாதிரியார் மற்றும் பெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனையெல்லாம் முதலில் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த மணப்பெண், ஒருகட்டத்தில் தனக்கு இந்த திருமணமே வேண்டாம் என பொறுமை இழந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் தடபுடலாக ஏற்பாடுஇ செய்யப்பட்டிருந்த திருமணம் நின்றது. இதனையடுத்து இருவீட்டார்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக தேவாலயத்தில் இருந்தவர்கள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து காவல்துறைக்கு புகாரளித்தனர். அங்கு வந்த போலீசார் இருதரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மணமகளின் குடும்பத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், மணப்பெண் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என உறுதியாக சொன்னார். அதேசமயம் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை தர வேண்டும் அல்லது மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணமகன் வீட்டார் திருமணத்துக்கான நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் தர ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே மதுபோதையில் தேவாலயத்தில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.