Digital Arrest: மகனை வைத்து டிஜிட்டல் மோசடி.. ரூ.2 கோடியை இழந்த பெண்.. வீட்டையும் விற்ற அவலம்!
இந்த விவகாரத்தில் உங்கள் மகன் சிறையில் இருப்பான் என சொல்லியே அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். ஜூன் 19 முதல் நவம்பர் 27 வரை அந்தப் பெண், எதிராளிகளின் உத்தரவின் பேரில் பலமுறை பணம் அனுப்பியுள்ளார்.

பெங்களூருவில் டிஜிட்டல் மோசடியில் சிக்கிய பெண் ஒருவர் ரூ.2 கோடிக்கும் மேல் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்பங்கள் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு விட்டது. நினைத்த விஷயத்தை நினைத்த இடத்தில் இருந்தே நிறைவேற்றும் அளவுக்கு சமூகம் மாறி விட்டது. அதேசமயம் மோசடிகளும் டிசைன் டிசைனாக அரங்கேறி கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு விஷயம் தான் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.
அங்கிருக்கும் நியூ திப்பசந்திரா பகுதியில் பெண் ஒருவர் தனது 10 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி, வைட்ஃபீல்ட் CEN காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த ஜூன் 19ம் தேதி ப்ளூ டார்ட் கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் போதைப்பொருள் அடங்கிய பார்சல் ஒன்று உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது. உங்களை கைது செய்ய மும்பை போலீசார் வருவார்கள் என கூறி இணைப்பை துண்டித்தார்.
இதனால் பயந்துபோன அந்த பெண் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியுள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எதிர்த்தரப்பு மும்பை காவல்துறை அதிகாரிகளாக பேசியுள்ளனர். அப்போது தங்கள் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டியுள்ளனர். அப்பெண்ணும் சரி என சம்மதம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சில மொபைல் அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்ய வேண்டும் எனவும், விசாரணைகள் முடியும் வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். யாருடனும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனவும் அப்பெண் மிரட்டப்பட்டிருக்கிறார். அப்பெண் பற்றிய விவரம் சேகரிக்கும்போது அவருக்கு ஒரு 10 வயது மகன் இருப்பதை எதிராளிகள் கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரத்தில் உங்கள் மகன் சிறையில் இருப்பான் என சொல்லியே அப்பெண்ணை மிரட்டியுள்ளனர். ஜூன் 19 முதல் நவம்பர் 27 வரை அந்தப் பெண் எதிராளிகளின் உத்தரவின் பேரில் பலமுறை பணம் அனுப்பியுள்ளார். இதற்காக விக்னன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மிகக் குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார். மேலும் மாலூரில் தனக்கிருக்கும் இரண்டு பிளாட்களை குறைந்த விலைக்கு விற்றார்.
அதுமட்டுமல்லாம வங்கிக் கடனும் பெற்றுள்ளார். தேவையான பணம் பறித்த பிறகு அந்த கும்பல் தடையில்லா சான்றிதழ் பெற காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து வைட்ஃபீல்ட் காவல் நிலையத்திற்கு சென்ற அப்பெண் நடந்த சம்பவத்தை கூற அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த பெண் சுமார் ரூ.2 கோடியை தன்னை மிரட்டியவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். ஒரே தவணையாக அதிகப்பட்சமாக ரூ.70 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதன் பின்னர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.





















