Crime : ஸ்மார்ட்போன் வாங்கித் தர மறுத்த தாய்...! கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்..!
பெங்களூரில் ஸ்மார்ட்போன் வாங்கித் தராததால் ஆத்திரத்தில் தாயை கழுத்தை நெரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர். இங்குள்ள மைலாசண்ராவில் வசித்து வருபவர் பாத்திமா மேரி. இவருக்கு வயது 45. இவருக்கு ஜோய்ஸ் மேரி ( வயது 24), தீபக் ( வயது 26) என்ற மகனும் உள்ளனர். பாத்திமா மேரி தங்களது தோட்டத்தில் வளரும் காய்கறிகளை அருகில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி வழக்கம்போல பாத்திமா மேரி தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அவர் தனது மகள் ஜோய்ஸ் மேரியிடம் மகன் தீபக் எழுந்த பிறகு அவனை தோட்டத்திற்கு அனுப்பி வை என்று கூறியுள்ளார். மதியம் அம்மாவை அழைத்து வருவதற்காக தீபக் சென்றுள்ளார். ஆனால், அம்மா அங்கு இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து, தனது அம்மாவை காணவில்லை என்று தீபக் தங்கை ஜோய்ஸ் மேரியிடமும், குடும்பத்தாரிடமும், உறவினர்களிடமும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, அனைவரும் பாத்திமா மேரியை தேடியுள்ளனர். மதியம் 2 மணியளவில் ஜோய்ஸ் மேரிக்கு தீபக் போன் செய்துள்ளார். அப்போது, அவர் என்.ஐ.சி.இ. சாலையில் தங்களது தாய் பாத்திமா மேரி உயிரிழந்து கிடப்பதாகவும், அவரை யாரோ சேலையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் என்றும் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக்கேட்ட ஜோய்ஸ் மேரி வேதனை அடைந்து கதறி அழுதுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாத்திமா மேரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், பாத்திமா மேரியின் சடலத்தில் இருந்து கிடைத்த கைரேகையை பயன்படுத்தி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது, பாத்திமா மேரியின் குடும்பத்தாரிடமும் விசாரணையை செய்தபோது தீபக் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால், தீபக் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தீபக் தனது தாய் பாத்திமா மேரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தாய் பாத்திமா மேரியை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற தீபக் அங்கு தனது தாயிடம் புதியதாக ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்றும், அதற்கு 20 ஆயிரம் பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால், தற்போதுள்ள சூழலில் 20 ஆயிரம் தன்னால் தர இயலாது என்று பாத்திமா மறுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தீபக் தாய் பாத்திமாவிடம் சண்டையிட்டுள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற தீபக் தாய் என்றும் பாராமல் பாத்திமா மேரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், தாயின் கைப்பையில் இருந்த 700 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற தீபக் எதுவுமே நடக்காதது போல நடித்துள்ளார். தீபக்கை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
புதிய ஸ்மார்ட்போன் வாங்கித் தரக்கூறி பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்