உனக்கெல்லாம் முடி வெட்ட முடியாது.. சலூனில் தெறிக்கும் சாதி வெறி.. சேலத்தில் பரபரப்பு.!
தமிழக அரசு முறையிட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்;பொதுமக்கள் கோரிக்கை.
ஆத்தூர் அருகே தொடரும் சாதிப்பிரச்சனை, பட்டியலின இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பு தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊனத்தூர் கிராமத்தில் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சரிபாதியாக பட்டியல் இன பொதுமக்கள் மற்றும் பிற சாதியினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் இரட்டை குவளை முறை இருந்தபோதும் அதனை தற்போது முற்றிலுமாக ஒழித்து விட்டதாக கிராம பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால், இருந்தபோதும் சாதிய கண்ணோட்டத்தோடு பார்க்கும் மனநிலை இன்றும் இருந்து கொண்டு தான் உள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஊனத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த பூவரசன் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள சலூன் கடைக்கு சென்று தனக்கு முடி வெட்டுமாறு கூறியுள்ளார். இதற்கு அக்கடையின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த இடத்தின் உரிமையாளர் பெண், பட்டியலின ஆண்களுக்கு எப்போது இங்கு முடி வெட்டி உள்ளனர் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ காட்சியில் பூவரசனும் என்பவர் தனது முடியை சரி செய்ய கடையின் வேலை பார்ப்பவர் இடம் கூறுகிறார், அதற்கு உங்களது முடியை சரி செய்ய முடியாது என கடை ஊழியர் கூறுகிறார். அதற்கு பூவரசன் என்பவர் ஏன் முடி வெட்டக்கூடாது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது செல்போனிலும் அதனை வீடியோவாக பதிவு செய்தார். இது குறித்த தகவல் அறிந்த அழகு நிலைய உரிமையாளரின் உறவினர்கள் அப்பகுதியில் குவிந்தனர் மேலும் பூவரசனிடம் வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சாதிப் பெயரை சொல்லி முடி திருத்தம் செய்ய மறுக்கின்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக பூவரசன் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தலைவாசல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன நாகரீக வாழ்க்கையில் தீண்டாமை முற்றிலுமாக பல இடங்களில் ஒழிக்கப்பட்ட நிலையில், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்றும் சமூக அந்தஸ்து கிடைக்காமல் பலர் சிரமப்பட்டு வருவதை காட்டுகிறது எனவும், தமிழக அரசு இதில் முறையிட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர்.