ஆம்ஸ்ட்ராங் கொலை : பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்!
இந்த படுகொலை குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்:
சென்னை பெரம்பூரில் வசித்து வசித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்த படுகொலை குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த கொலை குறித்து வெளியான பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் இவ்வாணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டெலிவரி ஊழியர்கள் போல் கொலையாளிகள்:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் தெருவில் வசித்து வந்த நிலையில் ஜூலை 5 ஆம் தேதி இரவு தனது வீட்டு வேலை நடந்துக் கொண்டிருக்கும் இடத்தில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. அதில் டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி விட்டு 3 இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
கட்சியில் மாநிலத்தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து நேற்று முன் தினம் அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
கைதும், கொலைக்கான பின்னணியும்:
இக்கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, அவரது நண்பர்கள் என கூறப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேரும் சரணடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இக்கொலையில் அரசியல் காரணங்கள் எதுவுமில்லையென போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும், உண்மை நிலையை வெளியே கொண்டுவர வேண்டும், மேலும் இக்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.