உறங்கிக் கொண்டிருந்த தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த மகன் கைது
ஆரணி பகுதியில் சொத்து பிரித்து தரவில்லை என பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி கொலுத்திய மகனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அக்ராப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பாசாமி, இவர் இறந்து விட்டார்.இவரது மனைவி ஜெயா வயது (65).இந்த தம்பதிக்கு விஜயகுமார் வயது (45), பூபாலன் வயது (43), தங்கதுரை எனற 3 மகன்களும் மற்றும் பேபி,செந்தாமரை என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில் ஜெயாவிற்கு குடும்ப சொத்தாக 2.80 ஏக்கர் விவசாய விளை நிலம் உள்ளது. ஜெயாவின் மூத்த மகனான விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை. மீதமுள்ள மகன், மகள்களுக்கும் திருமணம் நடைப்பெற்று இவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்துவருகின்றனர். ஜெயாவின் கணவர் இறந்து விட்டதால் விஜயகுமார் திருமணம் செய்து கொள்ளாமலும், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சொத்தில் பாக பிரிவினைக்கு பதிலாக பணம் கொடுக்குமாறு தினமும் விஜயகுமார் குடித்து விட்டு ஜெயாவிடம் பணம் கேட்டுதகராறில் ஈடுபட்டு வந்துள்ளாராம். தாய் ஜெயா தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த விஜயகுமார், இரவு வீட்டில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் பெட்ரோல் பங்கில் சென்று பெட்ரோல் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயா மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, தப்பியோடிவிட்டார். ஜெயவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர். ஜெயாவின் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது உடல் கருகிய நிலையில் இருந்த ஜெயாவை மீட்டு, சிக்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயாவின் மகன் பூபாலன் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிந்து விஜயகுமாரை கைது செய்து, ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை அடைத்தனர். சொத்து பிரித்து கொடுக்காததால் தாயை மகனே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்