முன்னாள் கணவரால் பால்கனியில் இருந்து தள்ளி விடப்பட்டு இளம்பெண் கொலை: காரணம் என்ன?
4வது மாடியில் இருந்து விழுந்த ரித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபுல் அகர்வால் பாத்ரூமின் ஜன்னல் வழியே கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்றப்பட்டார்.
ஆக்ராவில் இளம்பெண் ஒருவர் அவரது முன்னாள் கணவரால் பால்கனியில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 30 வயதான ரித்திகா சிங் என்ற இளம்பெண் ஒருவர் ஆக்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடி ஒன்றில் தனது காதலனுடன் வசித்து வந்தார். யூடியூப், இன்ஸ்ட்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
ஆகாஷ் கவுதம் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை 2018 ஆம் ஆண்டு ரித்திகா சிங் விவாகரத்து செய்தார். அதன்பின் விபுல் அகர்வால் என்ற இளைஞருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தார். இதனிடையே நேற்றைய தினம் முதல் கணவர் ஆகாஷ் கவுதம் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்களுடன் ரித்திகா தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்தார்.
அப்போது ரித்திகா- ஆகாஷ் கவுதம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் ஆகாஷ் கவுதமின் கும்பல் ரித்திகா மற்றும் விபுல் அகர்வாலை தாக்கியுள்ளனர். இந்த தகராறில் விபுல் அகர்வாலை கை கால்களை கட்டி பாத்ரூமில் அடைத்து வைத்த நிலையில் ரித்திகாவையும் கை கால்களை கட்டி பால்கனியில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர்.
இதில் 4வது மாடியில் இருந்து விழுந்த ரித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபுல் அகர்வால் பாத்ரூமின் ஜன்னல் வழியே கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காப்பாற்றப்பட்டார். இதனையடுத்து விபுல் அகர்வால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தாஜ்கஞ்ச் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்,
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்து பேர் மீது ஐபிசி 302 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்