நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது போலி டாக்டர் பட்டமா? - வெடித்தது புதிய சர்ச்சை...
நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன மாஸ்டர் சாண்டி, ஸ்டாண்ட் அப் காமெடியன் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோருக்கு இந்நிகழ்ச்சியில் டாக்டர் பட்டம் ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு நேரில் வரமுடியாத நடிகர் வடிவேலுக்கு நேரில் சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வழங்கினார்கள். அதன் வீடியோ நேற்றைய தினம் இணையத்தில் வைரலானது. இதனிடையே இந்த விழா குறித்த சர்ச்சை வெடித்துள்ளது. கௌரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் போலியான பட்டங்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட நிகழ்ச்சியில், அழைப்பிதழில் அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயர் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இதேபோல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பெயரை, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு கடந்த நவம்பர் மாதமே அனுமதி கோரப்பட்ட நிலையில், முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஓய்வுப்பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரையின் பேரில் அனுமதி வழங்கப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டது அண்ணா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் இல்லை என்றும், இந்த பட்டம் வழங்கியவர்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அழைப்பிதழில் இந்திய அரசு முத்திரை இடம் பெற்றது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் தான் தங்களுக்கு டாக்டர் பட்டம் தருவதாக நம்பிய அனைவரும் மகிழ்ச்சியாக பட்டம் பெற்றுள்ளனர். மேலும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.