'கொள்ளை அடிக்கலாம் எங்க ஊருக்கு வாங்க' வெளியூர் கொள்ளையர்களை சொந்த ஊர் அழைத்து வந்த கீழக்கரை கில்லாடி!
உங்க ஊர் பக்கம் தொழில் சரியில்லையா, எங்க ஊருக்கு வாங்க ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்பவர்களை பார்த்திருப்போம். ஆனால், எங்க ஊருக்கு வாங்க கொள்ளையடிக்கலாம் என்பவரை பார்த்தது உண்டா ?
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூர் திருடனை கூட்டு சேர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி காரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்கார தெருவை சேர்ந்தவர் 'செய்யது முஹம்மது பக்கீர். இவர் கீழக்கரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்ததற்காக அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் வேலை தேடி வேலூர் சென்று அங்கு ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு சில ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ’நோகாமல் நோம்பு கும்பிட’ குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அந்த நபர் வேலூர் கொள்ளை கும்பலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார். இவர்கள் ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி ஆறு பேரும் ராமநாதபுரம் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது ராமநாதபுரம் ரயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக காருடன் நின்ற 6 பேர் கொண்ட அந்த கும்பல் சிக்கியுள்ளது.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆறு பேரும் முன்னுக்குப்பின் முரணாக ஆளுக்கொரு பதிலளித்துள்ளனர். இதனால் மேலும் சந்தேகம் வலுவடைய, அவர்கள் வந்த காரை சோதனையிட்டபோது காரில், கை உறை, முகம் மறைக்கும் தொப்பி, கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காரை போலீசார் பறிமுதல் செய்ததுடன், ஆறு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கீழக்கரையை சேர்ந்த செய்யது முகம்து பக்கீர் கொடுத்த யோசனையின் பேரில் வேலூரைச் சேர்ந்த ரஹீம், பார்த்திபன், கார்த்திக், இப்ராகிம், ராபர்ட் ஜான் கென்னடி ஆகியோர் இந்தப்பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு ராமநாதபுரம் குதியில் சுற்றித் திரிந்தது தெரிய வந்துள்ளது.
'எங்க ஊரு பணக்கார ஊரு' வாங்க திருடலாம்'
சொந்த ஊரான கீழக்கரையில் வேலை செய்த இடத்தில் கையாடல் செய்த செய்யது முகமது பக்கீருக்கு இங்கு யாரும் வேலை கொடுக்க முன் வராததால் இங்கிருந்து வேலை தேடி வேலூருக்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் இந்த திருட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தக்கும்பலிடம் இவர், கீழக்கரை, ராமநாதபுரம் பகுதியில் அதிக அளவில் வெளிநாடுகளில் தங்கி நிறைய சம்பாதிப்பவர்களின் வீடுகள் அதிகம் உள்ளது. எனவே இரவு நேரங்களில் அங்கு திருடுவது நமக்கு நல்ல பலனைத் தரும் என அந்த கும்பலுக்கு யோசனை தந்துள்ளார் கீழக்கரையை சேர்ந்த செய்யது முகமது பக்கீர்.
இவரின் யோசனையை ஏற்ற வேலூர் கும்பல் அவரை உடன் அழைத்துக்கொண்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து காரில் கடந்த மூன்று நாட்களாகவே செல்வந்தர்கள் அதிகம் உள்ள கீழக்கரை, பெரியபட்டினம் உள்ளிட்ட இடங்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி சுற்றித்திரிந்ததுள்ளனர். ஆனால், போலீசாரிடம் சிக்கியதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து தகவலை கறந்த போலீசார் ஆறு பேரையும், கைது செய்து தீவிர விசாரணை விருந்து நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் கொள்ளையடிக்க கொண்டு வந்த சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
'உள்ளூர் மக்களின் கவலை'
'உங்க ஊர் பக்கம் தொழில் சரியில்லையா, எங்க ஊருக்கு வாங்க ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் அப்படின்னு சொல்லி தெரிந்தவர்களை அழைத்து வருவதை நம்ம பார்த்திருக்கோம்', 'ஆனா இங்க இவர உள்ளூரில் கையாடல் செஞ்சதால வேலையை விட்டு துரத்தி விட்டாங்க', வேலூருக்கு வேலை தேடிப் போனவர், அங்கிருந்து எங்க ஊருக்கு திருட வாங்கன்னு சொல்லி ஒரு கொள்ளை கும்பல கூட்டிட்டு வந்து இருக்காரு', ரொம்ப நல்லா வருவய்யா நீயி' நல்ல வேள போலீஸ் அவங்கள புடிச்சிட்டாங்க' 'இல்லைனா எங்கெல்லாம் போயி என்னவெல்லாம் செஞ்சிருப்பாங்க' அப்படின்னு ராமநாதபுரம் பொதுமக்கள் கன்னத்தில் கைவைத்து கவலையோட பேசிக்கிறாங்க'