எச்சில் துப்பியதில் பிரச்சினை: ஒருவர் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை!
மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எச்சில் துப்பிய பிரச்சினையில் கொலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான சுக்தேவ். இவருக்கும், மருவத்தூர் பெரியத்தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு இடையே எச்சில் துப்பியது தொடர்பாக கொரோனா காலமான கடந்த 2020 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனந்தனின் மகன் மற்றும் உறவினர்கள் 5 பேர் சுக்தேவை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த சுக்தேவ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவை இனி யாராலும் நெருங்க முடியாது - தி.மலையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது என்ன?
19 சாட்சிகளிடம் விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து, மருவத்தூர் பெரியத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்தன், பாலகுரு, சிவசாமி, சிவகுரு ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி 19 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டது.
ரோடு ஷோ நடத்தும் பிரதமர் கடைசியில் மக்களை ரோட்டில் விட்டு விடுவார் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
ஒரே வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
பிறழ்சாட்சியில்லாமல் அனைவரும் அளித்த சாட்சிகளின் மூலம் கொலை குற்றம் உறுதி செய்யப்பட்டு கொலை வழக்கில் தொடர்புடைய 55 வயதான ரவிச்சந்திரன், 31 வயதான அரவிந்த், 49 வயதான பாலகுரு, 60 வயதான சிவசாமி, 58 வயதான சிவகுரு ஆகிய 5 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அதனை அடுத்து குற்றவாளிகள் 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது திருச்சி மத்திய மண்டலத்தில் இதுவே முதல் முறை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் தெரிவித்தார்.