”நான்தான்டா கார் கிங்”.. 8 வருடங்களாக ஆடம்பர கார்களை மட்டுமே குறிவைத்த கார் கிங் குணால் கைது
8 ஆண்டுகளாக சொகுசு கார்களை திருடிவந்த கார் கிங் குணால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
"கார் கிங்" என்று அழைக்கப்படும் குணால் என்பவர் டெல்லியில் சொகுசு கார்களை திருடி உத்தரப் பிரதேசம் மற்றும் காஷ்மீருக்கு சப்ளை செய்திருக்கிறார். குணால் தன்னை தானே'கார் கிங்' என்று அழைத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிவில் லைன்ஸில் வசிக்கும் ஸ்வேதாங்க் அகர்வால் என்பவர் தனது வீட்டிற்கு வெளியில் இருந்து தனது கார் திருடப்பட்டது குறித்து புகார் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் அவர் தேவைக்கேற்ப வாகனங்களை சப்ளை செய்வதற்காக கும்பலை வழிநடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செவ்வாயன்று, குணால் திருடப்பட்ட காரோடு மாலை 6 மணியளவில் மடாலய சந்தைக்கு அருகில் வருவார் என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குணாலுக்காக காவல் துறையினர் காத்திருந்தனர்.
அப்போது, சந்த்கி ராம் அகாராவில் இருந்து க்ரெட்டா கார் வருவதைக் கண்டு அந்த வாகனத்தை மறித்துள்ளனர். காரின் ஆவணங்கள் குறித்து கேட்டபோது வாகனத்திற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது.
இதனையடுத்து, திருடுபோன காரின் நம்பர் பிளேட் மூலம் சரிபார்த்தபோது, இந்தக் காரின் மாடல் மற்றும் வண்ணம் ஒத்துபோனது. ஆனால் அதன் இன்ஜின் மற்றும் சேஸ் எண்களுடன் ஒத்துப்போகவில்லை, இதைத் தொடர்ந்து ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பிறகு நடத்திய விசாரணையில், குணால் 2013ஆம் ஆண்டு முதல் கார்களை திருடி வருவதாகவும், டெல்லி-என்சிஆரில் இருந்து சொகுசு கார்களை திருடி உத்தரப் பிரதேசம் மற்றும் காஷ்மீருக்கு சப்ளை செய்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர், ஒரு பகுதியில் ஒரே மாதிரியான, நிறம் மற்றும் மாடலில் உள்ள வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளையும், மற்றொரு பகுதியில் இருந்து காரையும் திருடுவார் என்று டிசிபி கூறினார்.
திருடப்பட்ட காரின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டுகளை மாற்றி திருடப்பட்ட நம்பர் பிளேட்டுகளை வைத்து, வாகனத்தை இயக்கியிருக்கிறார். மேலும், குணால் வாகனத்தை டெலிவரி செய்வதற்காக வேறு இடத்திற்கு வாடிக்கையாளரைஅழைப்பது வழக்கம்.
இவர் இதற்கு முன்பு ஒன்பது குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். அவரிடமிருந்து நான்கு கார்கள், வெவ்வேறு கார்களின் சாவிகள், கார்களைத் திருடப் பயன்படுத்திய கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்