Siva Shankar Baba Case: சிவசங்கர் பாபா வழக்கு: ஆசிரியர்கள் 4 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!
சிவசங்கர் பாபா பாலியல் வழக்கு தொடர்பாக நான்கு ஆசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டது. இதுவரை சிவசங்கர் பாபா இரண்டு போக்சோ வழக்கின் கீழ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நோற்று காலை சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை மூன்றாவது போக்சோ வழக்கில் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நீதிபதி 16 ஆம் தேதி வரை சிவசங்கர் பாபா நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரை விசாரிப்பதற்கான சம்மன் கொடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 17ஆம் தேதி கேளம்பாக்கம், பழனி கார்டனுக்குச் சென்ற நிலையில் காயத்திரி, பிரவீனா உள்ளிட்ட ஆசிரியைகள் 5 பேரும் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின் 5 ஆசிரியைகளின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 20.07.2021 அன்று சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான 3 ஆசிரியைகளின் வாக்குமூலங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் பதிவு செய்துகொண்டனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என 3 ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிவசங்கர் பாபாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் உள்ள தரவுகள் அடிப்படையில் 5 ஆசிரியைகளை போலீசார் விசாரிக்க சென்னை சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் நான்கு ஆசிரியர்கள் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர். சிவசங்கர் பாபா வீட்டு மின் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் இருக்கும் தரவுகளைக் கொண்டு ஆசிரியர்களும் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்கள் தரப்பு சார்பில் என்னென்ன விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது என்பதை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்ய உள்ளனர். விசாரணையின் முடிவில் ஆசிரியர்கள் சிவசங்கர் பாபாவிற்கு எந்த வகையில் உதவி செய்தனர் எவ்வாறு உதவி செய்தனர் உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள் படிங்க அன்று பாம்பே வரை ஏற்றுமதியான கருங்குழி வெற்றிலை..! காய்ந்து காணாமல் போன கதை என்ன ?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X