கரூர்: குழந்தைகள் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் சேர்ந்துள்ளீர்கள் - மிரட்டல் விடுத்து பணம் கேட்ட 4 பேர் கைது
சைபர் குற்றங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் 20 வயதுக்கு கீழ் உடைய இளைஞர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் சேர்ந்துள்ளதாக மிரட்டல் விடுத்து தாம்பரம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் எனக்கூறி கரூர் கார் டிரைவரிடம் பணம் அபகரித்த நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
கரூர், தாந்தோணிமலை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 28). கார் டிரைவர். இவரது செல்போன் எண்ணுக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து, தான் சென்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வருதாகவும், பெயர் முருகன் எனவும் கூறிக்கொண்டார். பின்னர் சுரேந்தரிடம் உங்கள் செல்போன் எண், குழந்தைகள் ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட்டு உள்ளது. நீங்கள் அந்த குழுவில் சேர்ந்துள்ளது குறித்து உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக நீங்கள் சென்னை வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். பின்னர் இந்த பிரச்சினையை தீர்க்க பணம் கொடுத்தால் போதும் என கூறியுள்ளார். அதற்காக ரூ.5 ஆயிரத்தை கூகுள்-பே மூலமாக அனுப்புமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதனால் பயந்து போன சுரேந்தர் கூகுள்-பே மூலம் ரூ.5 ஆயிரத்தை அந்த நபரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து மீண்டும் சுரேந்தரை தொடர்பு கொண்ட அந்த நபர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேந்தர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், ஆய்வாளர் அம்சவேணி வழக்குப்பதிந்து, உதவி ஆய்வாளர் எனக்கூறி பணம் பறித்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். கோயம்புத்தூரை சேர்ந்த கெளதம், சந்தான சொர்ணகுமார், ஜான் பீட்டர், மாதவன் ஆகிய நான்கு பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜான் பீட்டர் ஈரோட்டை சேர்ந்த ஒருவரிடம் 60 ஆயிரம் பணம் மோசடி செய்து ஏமாற்றி இதே போன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. திருச்சி, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையங்களிலும் இவர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இதுபோன்ற சைபர் குற்றங்களில் கைதேர்ந்த சபரி மற்றும் மூர்த்தி என்ற இருவரின் மேற்பார்வையின் கீழ் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும், இதுவரை பொதுமக்களை ஏமாற்றி மாதம் ஒரு வங்கிக்கணக்கை மாற்றிக் கொண்டு, வடமாநிலத்தவர் பெயர்கள் கொண்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி, கடந்த இரண்டு மாதத்தில் சுமார் 5 லட்சம் வரை பணம் பறித்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் வாங்குவது, சொகுசு விடுதியில் தங்கி மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி உல்லாச வாழ்க்கை வாழ்வது என்று இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் 20 வயதுக்கு கீழ் உடைய இளைஞர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.