Crime : டெல்லி என்.ஐ.டியில் படிக்க வந்து போதைக்கு அடிமையான நைஜீரிய மாணவர்..! ரூ. 1.12 கோடி மதிப்பில் ஹெராயின் பறிமுதல்..!
ஹெராயின் விற்பனையில் ஈடுபட்ட டெல்லி என்.ஐ.டி.யில் படித்துவந்த நைஜீரியாவைச் சேர்ந்த மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் டேவிஸ். இவர் டெல்லியில் உள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் படித்து வருகிறார். இவர் தற்போது டெல்லியில் உள்ள துவாரகாவில் தங்கி படித்து வருகிறார். டெல்லியில் படித்து வந்த இவருக்கு அவரது நாட்டைச் சேர்ந்த சக மாணவர்களுடன் சேர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தார். போதை பழக்கங்களில் ஈடுபட்டு வந்தவர் நாளடைவில் கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், சண்டிகர் போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் டேவிஸ் அந்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரிடம் ஹெராயின் இருப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மொத்த மதிப்பு சர்வதேச சந்தையில் ரூபாய் 1.12 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட டேவிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், போலீசார் டேவிசிடம் நடத்திய விசாரணையின்போதுதான் அவர் தேசிய தொழில்நுட்ப பல்கலைகழக மாணவர் என்பது தெரியவந்தது. 35 வயதான டேவிஸ் கடந்த 2019ம் ஆண்டு டெல்லியில் உள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். அவரது விசா 2022ம் ஆண்டுடன் நிறைவு பெற உள்ளது. கல்வி விசாவில் வந்த டேவிசின் விசா நடப்பாண்டுடன் நிறைவு பெற உள்ளதால், அவரது விசா நிறைவடைந்துவிட்டதாக அல்லது இன்னும் நாட்கள் உள்ளதாக என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் டேவிஸ் கடந்த சில மாதங்களாகவே ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், டெல்லியில் இருந்து சண்டிகருக்கு தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு ஹெராயின் விற்பதற்காகவே வந்ததாகவும், வந்தபோதே போலீசாரிடம் பிடிபட்டதாகவும் தெரியவந்தது.
சண்டிகரில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பிடிபடுவது 5வது முறையாகும். இந்த மூன்று மாதங்களில் மட்டும் 25 கிலோ கிராம் ஹெராயின்ஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து டெல்லிக்கு படிக்கவந்த மாணவர் ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள டேவிசுடன் தொடர்பில் இருந்தவர்களில் ஹெராயின் விற்பனையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்றும், டெல்லி தேசிய தொழில்நுட்ப பல்கலைகழக மாணவர்கள் வேறு யாரேனும் ஹெராயின் விற்பனையில் ஈடுபட்டு வந்தனரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்