Watch video: பல்வேறு கோயில்களில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை.. கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
”பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல பல்வேறு கோயில்களில் கைவரிசை காட்டிய 3 பேரை கைது செய்தது காவல்துறை”
நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், ஏர்வாடி, பணகுடி, திருக்குறுங்குடி, நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமங்களில் உள்ள மக்கள் ஆங்காங்கே உள்ள இடங்களில் வழிபாட்டு தலமான கோயில்கள் அமைத்து பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். மேலும் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் பணம் செலுத்துவது வழக்கம். இந்த சூழலில் கோயில் உண்டியல்களில் பக்தர்களால் செலுத்தப்படும் பணத்தை திட்டமிட்டு கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட கோயில்களில் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்ததாக தெரிய வந்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இக்கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்த நிலையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் உண்டியலில் கொள்ளை போன கோயில்களுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதனடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர். குறிப்பாக இளம் வயது வாலிபர்கள் இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோயில் உண்டியல்களை உடைப்பது பதிவாகி இருந்தது. இதற்காக உதவி காவல் ஆய்வாளர் அருண்ராஜா மற்றும் தலைமைக் காவலர் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்த கொள்ளை கும்பல் சிசிடிவி காட்சியால் சிக்கியது @abpnadu @SRajaJourno pic.twitter.com/CBExoLHcCz
— Revathi (@RevathiM92) August 2, 2022
இந்நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் இரவு நேரத்தில் சுற்றி கொண்டிருந்த நிலையில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசிய அவர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கோயில் உண்டியலில் கொள்ளையடித்து சிசிடிவி காட்சிகள் மூலம் தேடப்பட்டு வந்தவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய நபர், லட்சுமிபுரம் தேவராஜ் மகன் ஆண்டனி ராஜ் (28), நெல்லை மாவட்டம் காவல்கிணறு கிருஷ்ணமூர்த்தி மகன் நாகராஜன் (எ) காக்கா (39) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயில்களில் தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்த நபர்கள் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.