Master Card | மாஸ்டர் கார்டு தடை: யாருக்கு பாதிப்பு?
ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் கார்டுகளில் 45 சதவீதம் மாஸ்டர் கார்டுகள்தான். இதுதவிர ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட அமெக்ஸ் கார்டுகளையும் ஹெச்டிஎப்சி வங்கி வழங்கி வருகிறது
வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய கார்டுகளை வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. இந்த தடையால் ஆறு வங்கிகளும் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமும் பாதிக்கப்படும் என தெரிகிறது. யெஸ் வங்கி மற்றும் ஆர்பிஎல் வங்கி வழங்கும் அத்தனை கார்டுகளும் மாஸ்டர்கார்டுகள்தான். அதனால் ரிசர்வ் வங்கி தடையால் இந்த இரு வங்கிகள்தான் அதிகம் பாதிப்படையும் என ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
மாதத்துக்கு ஒரு லட்சம் கார்டுகளை ஆர்பிஎல் வங்கி வழங்கி வருகிறது. இந்த தடையால் புதிய கார்டு வழங்குவதில் பெரும் சிக்கல் உருவாகும். அதனால் விசா கார்டு நிறுவனத்துடன் ஆர்பிஐ வங்கி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. ஆனால் வழக்கமான நடைமுறைகள் முடிவதற்கு 8 முதல் 10 வாரங்கள் ஆகும் என தெரிகிறது. இது தவிர பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் ஆர்பிஎல் வங்கியுடன் இணைந்தும் கார்டுகளை வழங்கிவருகிறது. இதுவும் பாதிப்படையும்.
யெஸ் வங்கி கடந்த நான்கு மாதங்களில் 90000 கிரெடிட் கார்டுகள் வழங்கியுள்ளது. இவை அனைத்தும் மாஸ்டர் கார்டுகள்தான். இதனால் வேறு நிறுவனத்துடன் இணைவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக வங்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் கார்டுகளில் 45 சதவீதம் மாஸ்டர் காடுகள்தான். இதுதவிர ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட அமெக்ஸ் கார்டுகளையும் ஹெச்டிஎப்சி வங்கி வழங்கி வருகிறது. ஆனால் ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ரிசர்வ் வங்கி தடைவிதித்திருக்கிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வரையில் புதிய கார்டுகளை வழங்க கூடாது என்னும் தடையால் ஹெச்டிஎப்சி வங்கிக்கு பாதிப்பு இல்லை.
ஆனால் இந்த தடைக்கு முன்பு சுமார் 2 லட்சம் கிரெடிட் கார்டுகளை ஹெச்டிஎப்சி வங்கி வழங்கிவந்தது. ஒரு வேளை ரிசர்வ் வங்கி தடையை விலக்கும்பட்சத்தில், மாஸ்டர் கார்ட் தடையால் ஹெச்டிஎப்சி வங்கிக்கும் பாதிப்பு ஏற்படும். ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி வழங்கும் கார்டுகளில் 35-36 சதவீதம் வரை மாஸ்டர் கார்டுகள்தான். அதனால் இந்த மூன்று தனியார் வங்கிகளுக்கும் மிதமான பாதிப்பு இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது ஐசிஐசிஐ வங்கி ஒவ்வொரு மாதமும் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் கிரெடிட் கார்டுகள் வரை வழங்குகிறது. 35 சதவீதம் வரை மாஸ்டர் கார்டுகளதான்.
கிரெடிட் கார்ட் சந்தையில் நான்காவது பெரிய நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கி. இந்த வங்கி இதுவரை 70 லட்சம் கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது. வெளிநாட்டு வங்கியான சிட்டி வங்கியும் சில வகையான கிரெடிட் கார்டுகளை மாஸ்டர் கார்ட் மூலமாகவே வழங்குகிறது. இரண்டாவது பெரிய கிரெடிட் கார்ட் நிறுவனமான எஸ்பிஐ வங்கிக்கு இந்த தடையால் பெரிய பாதிப்பு இல்லை. 1.1 கோடி கார்டுகள் உள்ளன. மாதம் ஒரு லட்சம் கார்டுகளை எஸ்பிஐ வழங்குகிறது. ஆனால் இதில் 10 சதவீதம் மட்டுமே மாஸ்டர்கார்டுகள் ஆகும்.
இந்தியாவில் மே மாத முடிவு நிலவரப்படி 6.2 கோடி கார்டுகள் உள்ளன. இதில் 50 சதவீதம் வரை விசா கார்டு. 30 முதல் 35 சதவீதம் வரை மாஸ்டர் கார்டு. கிரெடிட் கார்டு சந்தையில் தனியார் வங்கிகள் இருப்பதால் ரூபே கார்டுகளின் பங்களிப்பு மிகவும் குறைவு. ஆராய்ச்சி நிறுவனமான நொமுரா இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.