Roshni Nadar: இந்தியாவின் பணக்கார பெண்மணி! யார் இந்த ரோஷ்னி நாடார்?
Roshni Nadar: இந்தியாவின் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ரோஷ்னி நாடார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Roshni Nadar: இந்தியாவின் டாப் 3 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ரோஷ்னி நாடார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
யார் இந்த ரோஷ்னி நாடார்:
HCL நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் தான் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா. HCL நிறுவனத் தலைவரான ஷிவ் நாடார் மற்றும் கிரண் தம்பதிக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் ரோஷ்னி நாடார். புது டெல்லியில் உள்ள வசந்த் வேலி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.
பின்னர் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். ஆரம்ப காலத்தில் ஊடக துறையில் செய்தி தயாரிப்பாளராக பணியாற்றிய ரோஷ்னி நாடார் பின்னர் HCL குழுமத்தில் இணைந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு HCL நிறுவனத்தின் தலைவரானார்.
இதனைத் தொடர்ந்து இவரது தலைமையின் கீழ் பல்வேறு வெளிநாடுகளிலும் HCL நிறுவனம் கால்பதித்தது. இவர் ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நல சேவைகளையும் செய்து வருகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஷிகர் மல்ஹோத்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் இருக்கின்றனர். போர்ப்ஸ் இதழ் 2023-ல் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ரோஷ்னி 60-ம் இடம் பெற்றிருந்தார்.
முதல் பெண் பணக்காரர்:
கடந்த மார்ச் மாதம் தனது 47 சதவீத பங்குகளை மகள் ரோஷ்னிக்கு சிவ் நாடார் எழுதி வைத்ததன் மூலம இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார். இந்த நிலையில் தான் ரோஷ்னி நாடார் தற்போது ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் என்ற பெருமையையும், முதல் பெண் பணக்காரர் என்ற சாதனையையும், இளம் பணக்காரர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















