Vedantu Unicorn Club: அடுத்த யுனிகார்ன் Vedantu...!
போட்டி தேர்வுகள், ஸ்போகன் இங்கிலிஷ், கணிதம் உள்ளிட்ட இதர பயிற்சிகளை வேதாந்து வழங்குகிறது. நீட் மாநில அரசுகளின் பாடத்திடங்கள் என மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகிறது வேதாந்து.
யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கிறது வேதாந்து. 2021-ம் ஆண்டில் 28வது யுனிகார்ன் இதுவாகும் (100 கோடி டாலர் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனம் நிறுவனம் யுனிகார்ன் என்று கூறப்படுகிறது) கடந்த ஆண்டு 10 கோடி டாலர் அளவுக்கு திரட்டியது. ஆனால் அப்போது சந்தை மதிப்பு 60 கோடி டாலராக இருந்தது. தற்போது 100 கோடி டாலர் சந்தை மதிப்பில் 10 கோடி டாலர் தொகையை திரட்டி இருக்கிறது.
டெமாசெக் தலைமையிலான முதலீட்டு நிறுவனங்கள் சில இந்த முறை முதலீடு செய்திருக்கின்றன. டைகர் குளோபல், ஜிசிவி கேபிடல், வெஸ்ட் பிரிட்ஜ் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. 10 கோடி டாலர் முதலீடு கிடைத்திருந்தாலும், இந்த சந்தை மதிப்பில் மேலும் சில நிறுவனங்கள் சில கோடி டாலர்கள் முதலீடு செய்யும் என தெரிகிறது.
எஜுடெக் பிரிவில் இந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த பிரிவில் ஏற்கெனவே பைஜூஸ், அன்அகாடமி, Eruditus மற்றும் அப்கிரேட் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் யுனிகார்ன் நிறுவனங்கள். எஜுடெக் பிரிவில் ஐந்தாவது யுனிகார்ன் நிறுவனமாக வேதாந்து நிறுவனம் உருவாகி இருக்கிறது. கடந்த மாதம் வேதாந்து நிறுவனத்தை பைஜூ’ஸ் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்தியை வேதாந்து மறுத்தது. தற்போது அடுத்தகட்ட நிதி திரட்டலுக்கு பிறகு யுனிகார்ன் நிலையை எட்டி இருக்கிறது.
ஆரம்பம் என்ன?
2014-ம் ஆண்டு வம்சி கிருஷ்ணா, புல்கிட் ஜெயின், ஆனந்த் கிருஷ்ணா மற்றும் சௌரப் சக்சேனா ஆகியோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இவர்கள் ஐஐடியில் படித்தவர்கள் ஏற்கெனவே லக்ஷயா இன்ஸ்டியூட் என்னும் நிறுவனத்தை தொடங்கி அதனை எம்.டி. எஜுகேர் நிறுவனத்திடம் விற்றுவிட்டனர்.
அதன் பிறகு தொடங்கப்பட்ட வேதாந்து 3 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கான பயிற்சியை வழங்குகிறது. போட்டி தேர்வுகள், ஸ்போகன் இங்கிலிஷ், கணிதம் உள்ளிட்ட இதர பயிற்சிகளை வேதாந்து வழங்குகிறது. நீட் மாநில அரசுகளின் பாடத்திடங்கள் என மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகிறது. இதுதவிர டாடா ஸ்கை மற்றும் ஏர்டெல் டிடிஹெச்-ல் சானல் மூலம் கோச்சிங் வழங்குகிறது. யூடியூப் மூலம் இலவச வகுப்புகளை நடத்துகிறது.
தற்போது மாதத்துக்கு 3.5 கோடி மாணவர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள். தற்போது 2 லட்சம் மாணவர்களுக்கு மேல் பணம் செலுத்தி படிக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் 5 லட்சம் மாணவர்கள் பணம் செலுத்தி படிக்க தொடங்குவார்கள் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மாதம் 54 லட்சம் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. கடந்த ஆண்டை விட 300 சதவீதம் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
கடந்த முறை திரட்டப்பட்ட நிதியில் 50 சதவீதம் அளவுக்கு இன்னும் மீதம் இருக்கிறது. மற்ற நிறுவனங்களை போல எங்களுடைய `பர்ன் ரேட்’ மிகவும் குறைவு. பணம் இருந்தாலும் இந்த பிரிவில் உள்ள வேறு சில நிறுவனங்களை வாங்குவதற்காக தற்போது நிதி திரட்டி இருக்கிறோம். அடுத்த 12-15 மாதங்கள் பல அறிவிப்புகள் வர இருக்கின்றன. இன்னும் ஒரிரு ஆண்டுகளில் லாப பாதைக்கு திரும்புவோம். அதனை தொடர்ந்து ஐபிஓ வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறோம் என்றும் வம்சி கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
இதுதவிர வெளிநாடுகளுக்கு செல்லவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் விரிவாக்கம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
ஏற்கெனவே இரு நிறுவனங்களை வேதாந்து வாங்கி இருக்கிறது. Instasolv என்னும் நிறுவனத்தை கடந்த பிப்ரவரியில் வேதாந்து வாங்கியது. அதேபோல கடந்த ஜூலை மாதம் pedagogy என்னும் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளையும் வேதாந்து வாங்கியது.
செப்டம்பர் மாதம் மட்டும் எம்பிஎல், அப்னா.கோ மற்றும் வேதாந்து ஆகிய நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கின்றன. இதுவரை 28 நிறுவனங்கள். இன்னும் மூன்று மாதங்களில் மேலும் சில நிறுவனங்கள் இந்த பட்டியலில் இணைய கூடும் என்றே முதலீட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.