Tesla Launch Problem: டெஸ்லா இந்திய சாலைகளுக்கு ஏற்றதுதான்.. ஆனாலும் சிக்கல்.. என்னதான் பிரச்னை!?
டெஸ்லாவின் நான்கு மாடல்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்றவை என சாலைபோக்குவரத்து துறை அமைச்சம் அனுமதி அளித்திருக்கிறது. இந்திய சாலைகளை டெஸ்லா நெருங்கிவந்தாலும், இன்னும் சிக்கல் முழுமையாக தீரவில்லை.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 40,000 டாலருக்கு கீழே இருக்கும் கார்களுக்கு 60 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 40,000 டாலருக்கு மேல் இருந்தால் 100 சதவீதம் வரி விதிக்கபடுகிறது.
இறக்குமதி வரி
டெஸ்லா கார்கள் சொகுசு கார்கள் இல்லை. அதனால் வரியை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் பெட்ரோல் டீசல் கார்களுக்கு இணையாக எலெக்ட்ரிக் கார்களுக்கும் வரி விகிதம் நிர்ணயம் இருக்க கூடாது என டெஸ்லா தெரிவித்திருக்கிறது. 40,000 டாலருக்கு கீழே உள்ள கார்களுக்கு 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமும் 40,000 டாலருக்கு மேலே உள்ள கார்களுக்கு 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என டெஸ்லா விரும்புகிறது. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் இறக்குமதி வரி குறித்து கவலைப்பட தேவையில்லை என நிதின் கட்கரி டெஸ்லா அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் இந்திய சந்தை எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளமால் பெரிய தொகையை முதலீடு செய்ய டெஸ்லா விரும்பவில்லை என தெரிகிறது.
ஆதரவும் எதிர்ப்பும்
டெஸ்லாவின் கோரிக்கையை ஏற்று பகுதி அளவு வரியை குறைக்க மத்திய அரசு விரும்புவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் டெஸ்லா நிறுவனத்தின் முழுமையான திட்டம் என்ன என்பது தெரிந்தால்தான் வரி குறைப்பு குறித்து பரிசீலனை செய்ய முடியும் என அரசு தெரிவித்திருக்கிறது. உள்நாட்டில் ஆலை தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசு விரும்புகிறது.
இந்த நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சார்ஜர் மற்றும் சார்ஜ் ஏற்றும் மையங்களுக்கான ஜிஎஸ்டியும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. பேம் {(Faster Adoption and Manufacturing of Hybrid and EV (FAME) } திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. இறக்குமதி வரி குறைப்பதற்கு தொடர்பாக ஆட்டோமொபைல் துறையில் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ஏற்கெனவே ஓலா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு டாடா குழுமமும் இறக்குமதி வரி குறைப்பது தொடர்பாக தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஃபேம் திட்டம் கொண்டுவரப்பட்டதே எலெக்ட்ரிக் வானங்களுக்கான விலையை குறைப்பதுதான். இந்த நிலையில் அதிக விலையுள்ள கார்களுக்கு சலுகை வழங்குவது பேம் திட்டத்தின் நோக்கத்தையே கேள்விகுறியாக்கும். மேலும் உள்நாட்டிலே தயாரிக்கும் பட்சத்தில்தான் விலையை குறைத்து கொடுக்க முடியும். வெளிநாட்டில் தயாரித்தால் விலையை குறைக்க முடியாது என்பது போலவும் டாடா தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் இணைந்து செயல்படுவதற்காக மூன்று நிறுவனங்களிடம் டெஸ்லா பேசி வருவதாக செய்திகள் வெளியானது. பாரத் போர்ஜ், சோனா காம்ஸ்டார், சந்தர் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களிடம் பேசி வருவதாக செய்தி வெளியானதை அடுத்து இந்த பங்குகள் விலை உயர்ந்தன. தினமும் எலெக்ட்ரிக் வாகன துறை பரப்பரப்பாகி வருகிறது.
Gold-Silver Price, 03 sep: விலையில் இன்று சரிவு... சென்னையில் இன்று தங்கம், வெள்ளி நிலவரம்!