2000 Rupees Note: 2000 ரூபாய் நோட் மாத்திட்டீங்களா? இன்னும் 5 நாள் தான் டைம்.. மாற்றாவிட்டால் என்ன நடக்கும்?
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
2000 Rupees Note: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள்:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016ம் ஆண்டு நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். ஒட்டுமொத்த நாட்டையே அதிர வைத்த அந்த அறிவிப்புக்கு பிறகு, புதிய 500 ரூபாய் நோட்டுகளையும், புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை பெருவாரியாக மத்திய அரசு நிறுத்திவிட்டதாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி நிலவரப்படி, இதுவரை 3.32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பணத்தை எப்படி மாற்றுவது?
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2000 ரூபாய் நோட்டை வேறு நோட்டுகளாக மாற்றுவதில், தொடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. மே 23, 2023 முதல், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தனிநபர்கள் 2000 ரூபாய் நோட்டை மற்ற பணத்துடன் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த நோட்டுகளை மாற்ற 20 ஆயிரம் ரூபாய் வரை வரம்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒருவர், ஒரு நாளைக்கு, 10 நோட்டுகள் வரை மாற்றிக்கொள்ளலாம். மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளுடன், எந்த ஆவணங்களும் தேவையில்லை. அதாவது, 20 ஆயிரம் ரூபாய் வரையில் எந்தவித ஆவணங்களும் இன்றி, பயனாளர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கலாம்:
வங்கிக் கிளையோ அல்லது வேறு எந்த நிறுவனமோ 2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள மறுக்கும் சூழ்நிலையை யாராவது சந்தித்தால், புகாரின் பெயரில் அதற்கான தகுந்த வழி கிடைக்கும். இதுபோன்ற சம்பவம் நடந்தால் தனிநபர்கள் அந்தந்த வங்கிகளுக்குச் சென்று புகார் அளிக்கலாம். செப்டம்பர் 30, 2023க்கு முன் இதைச் செய்வது முக்கியம். 30 நாட்களுக்குள் வங்கி பதிலளிக்கவில்லை என்றாலோ அல்லது வங்கியின் பதிலில் புகார்தாரர் அதிருப்தி அடைந்தாலோ, RBI போர்ட்டல் cms.rbi.org.in இல் புகாரைப் பதிவுசெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றாவிட்டால் 2000 ரூபாய் நோட்கள் அதன்பிறகு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த வணிக கடைகளிலும் எந்த ஒரு பொருட்களையும் 2000 ரூபாய் நோட்கள் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க