RPG Group Chairman Harsh Vardhan Goenka: ஹர்ஷ் கோயங்கா வாழ்வை மாற்றிய ‛ஆம் அல்லது இல்லை‛
நம்பிக்கை என்பது நாம் மற்றவர்கள் மீது வைப்பதல்ல, நம் மீதும் மற்றவர்கள் வைக்க வேண்டும். அதற்கு ஏற்ப நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும் என நம்புவர்
இந்தியாவின் முக்கியமான தொழில்குழுமங்களில் ஆர்பிஜி குழுமமும் ஒன்று. பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, சில நாட்களுக்கு முன்பு lessons from my father என ஒரு ட்விட் செய்திருந்தார். அதனை பார்க்கும்போது சில ஆண்டுகளுக்கு அப்பாவிடம் நான் கற்றுக்கொண்ட முக்கியமான நிர்வாக பாடம் என்பது குறித்து ஒரு பேட்டியில் மிகவும் விரிவாக குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த பேட்டி நினைவுக்கு வந்தது.
அதன் சுருக்கமான வடிவம் இதோ: அப்பா கற்றுக்கொடுத்ததில் நம்பிக்கை முக்கியம் என்பதே பிரதானமானது. படித்து முடித்த பிறகு எனக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான வேலை என்பது எங்கள் வீட்டில் உள்ள கார்களுக்கான பெட்ரோல் பில்களை சரிபார்ப்பதுதான். பில்களை சரியாக வாங்குவது, எவ்வளவு கிலோமீட்டர் ஓடி இருக்கிறது. எந்த கார் மைலேஜ் குறைவாக கொடுக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்து டிரைவரிடம் தெரிவிப்பது என முதல் 6 மாதங்கள் சிறப்பாக செய்து கொண்டிருப்பதாகவே நினைத்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகு அப்பா என்ன செய்கிறாய் என கேட்டார். நான் சொன்னவுடனே இதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்றுதான் கேட்டார்.
தினமும் அரை மணி நேரத்துக்கு மேல் செலவாகிறது என்று சொன்னேன். உடனே விதிமுறைகள் எப்படி உருவாக்க வேண்டும். அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தால் மட்டுமே போதுமானது. பணியாளர்களிடம் நம்பிக்கை வைத்து அவர்களை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கூறினார். மேலும் ஒரு பணியாளர்களை நம்புகிறாயா? இந்த கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்பதுதான் பதிலாக இருக்க முடியுமே தவிர வேறு பதில்கள் இருக்க முடியாது என்றும் அப்பா தெரிவித்தார். இந்த பாடத்தை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பின்பற்றி வந்திருக்கிறேன்.
ஆரம்ப காலத்தில் நாங்கள் செல்லுலார் தொழிலில் இருந்து வந்தோம். மத்திய பிரதேசத்தில் எங்களுக்கு இருந்த செயல்பாட்டை விற்க முடிவெடுத்தோம். டாடா குழுமம் எங்களது யூனிட்டை வாங்க தயாராக இருந்தது. கொள்கை அடிப்படையில் டாடா குழுமத்திடன் விற்பதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டோம். அதே சமயத்தில் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை.
ஆனால் சில நாட்களுக்கு பிறகு வேறு முக்கிய நிறுவனம், எங்களது யூனிட்டை கூடுதல் விலைக்கு கேட்டது. உண்மையில் டாடாவுடன் ஒப்பிடும்போது மிக நல்ல டீல். ஆனால் ஏற்கெனவே உத்தரவாதம் கொடுத்துவிட்டதால் அந்த ஆபரை நாங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். இதனை நாங்கள் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. அதிக விலை கிடைத்தும் கொடுத்த உத்தரவாதத்தை காப்பாற்றினீர்கள் என அப்போதைய டாடா குழுமத்தலைவர் ரத்தன் டாடா எனக்கு போன் செய்து பாராட்டினார்.
நம்பிக்கை என்பது நாம் மற்றவர்கள் மீது வைப்பதல்ல, நம் மீதும் மற்றவர்கள் வைக்க வேண்டும். அதற்கு ஏற்ப நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும். எங்கள் குழுமத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால் நாங்கள் கேட்பது வெளிப்படைத்தன்மையான நிர்வாகமும், நேர்மையை மட்டும்தான்.
ஆர்பிஜி குழுமத்தில் உள்ள சில நிறுவனங்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நிறுவனங்களாக அடிக்கடி பட்டியலிடப்படும். இதற்கு ஹெச்.ஆர். கொள்கை மட்டுமே காரணமல்ல. பணியாளர்கள் மீது நிர்வாகம் வைக்கும் நம்பிக்கையும் ஒரு காரணம். இந்த நம்பிகையே நிறுவனத்தின் கலாசாரமாகவும் மாறுகிறது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது எங்கள் குழுமத்தில் வெளியேறுவோர் விகிதம் குறைவு. சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை விட நம்பிக்கையே முக்கியமான காரணம்.
பணியாளர்கள் மீது நம்பிக்கை வைப்பதால் அதிக காலம் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். அதைவிட முடிவெடுக்கும் வேகம் எங்கள் குழுமத்தில் அதிகமாக இருக்கும். பணியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை எனில் வேகமாக முடிவெடுக்க முடியாது.
அதே சமயம் பணியாளர்கள் மீது 100% நம்பிக்கை வைக்கிறோம் என்பதற்காக நாம் அறியாமையிலும் இருக்ககூடாது. சமயங்களில் நாம் நம்பிக்கை வைப்பவர்கள் எடுக்கும் முடிவு தவறாக கூட இருக்கலாம். எங்களுடைய நிதிச்சேவை பிரிவில் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அதனால் அந்த தலைமைச் செயல் அதிகாரியை நாங்கள் முழுவதும் நம்பினோம். விரிவாக்க நடவடிக்கைகளில் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தோம். ஆனால் பல விரிவாக்கம் தோல்வியில் முடிந்தது. இந்த சரிவில் இருந்து மீள்வதற்கு குழுமத்துக்கு சில ஆண்டுகள் ஆனது.
இருந்தாலும் நம்பிக்கை குறித்து எனது கருத்தில் மாற்றம் இல்லை. In God we trust, all others must bring data. என்று சொல்லுவார்கள். ஆனால் எவ்வளவு ஆராய்ச்சி செய்து ஒரு முடிவை அறிவித்தாலும் மக்களை நம்பவில்லை நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது.
டிஜிட்டல் தங்கம்: ஆதாயம் என்ன ? இறங்கும் முன் கவனிக்க வேண்டியது?