பெண் குழந்தையின் பெற்றோரா? இந்த சேமிப்புத் திட்டத்தைப் பாருங்க.. பெரிய பலன் கிடைக்கும்..
அரசின் மற்ற சேமிப்புத்திட்டங்களை விட சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டத்திற்கு அதிகளவிலான வட்டியைப் பெற முடியும்.
பெண் குழந்தைகளுகளின் கல்வி, திருமணம் போன்ற அனைத்திற்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் எனப்படும் செல்வ மகள் திட்டம்.
வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தாலே மகாலட்சுமி என்று தான் அழைப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதோடு கல்வியையும் வழங்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் கல்விக்கற்க வேண்டும் என்றாலே பல லட்சம் கொடுத்து கல்லூரியில் சேர வேண்டியுள்ளது. 2021 லேயே இந்த நிலைமை என்றால் எதிர்காலத்தில் இதற்கு 2 அல்லது 3 மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தித்தான் நாம் படிக்க வேண்டியிருக்கும். அதோடு பெண் குழந்தைகளின் திருமணத்திற்கும் உதவியாக இருக்கும். இந்நிலையில் இதனையெல்லாம் நிறைவு செய்யும் விதமாக தான் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இத்திட்டம் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தைத் தொடங்குவதற்கான வயது மற்றும் வட்டி விகிதம் குறித்த விபரங்கள்:
பெண் குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.
பெண் குழந்தைகள் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். ஆனால் ஒரு பெண்ணிற்கு 18 வயதிற்கு மேல் திருமணமானாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும்.
வட்டி விகிதம்:
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதம். ஆனால் காலாண்டிற்கு ஒரு முறை மத்திய அரசால் இதன் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டும். எனவே முதலீட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் கணிசமான லாபத்தைக்கொடுக்கும் திட்டம். இத்திட்டத்தில் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ரூ. 250 முதல் ஆண்டிற்கு 1.50 லட்ச ரூபாய் வரை பணம் செலுத்தலாம். கணக்கு தொடங்கிய காலத்தில் இருந்து குறைந்தது 15 ஆண்டிற்கு இதில் பணம் செலுத்த வேண்டும்.
எனவே பெற்றோர்கள் எதிர்கால நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை இந்தியாவில் எந்தவொரு அஞ்சல் அலுவலகம், பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளின் மூலமாக இத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். மேலும் சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற நடைமுறை உள்ளது. இந்தத் திட்டத்தில் முதிர்வு மற்றும் வட்டித்தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற பிற தேவைகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தைத் தைரியமாக தொடங்கலாம் என கூறப்படுகிறது.