Gold Duty: யானை விலையிலும் ஈசியா தங்கம் வாங்க.. மத்திய அரசு கொடுத்த சலுகை - வரியை குறைச்சு அதிரடி
Gold Price Duty UAE: கடும் விலையேற்றத்திற்கு மத்தியில் மலிவாக தங்கத்தை சொந்தமாக்க வழி செய்யும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுங்க வரியே இன்றி தங்கத்தை கொண்டு வர மத்திய அரசு அனுமதித்துள்ளது.

Gold Price Duty UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தங்கத்தை கொண்டு வர மத்திய அரசு வழங்கியுள்ள சலுகைகள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
தங்கத்திற்கு வரிச்சலுகையை அறிவித்த மத்திய அரசு:
லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று. அங்கிருந்து ஒவ்வொரு முறை தாயகம் திரும்பும்போதும் பொதுவாகவே பெட்டிகள் நிறைய பரிசுகள், சாக்லேட்டுகள் மற்றும் நவீன மின்சாதன பொருட்கள் ஆகியவைற்றை கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், உலக நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சுங்க வரி இன்றி அனுமதிப்பதிற்கான விதிகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) அண்மையில் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், கூடுதல் அளவிலான தங்கத்தை கூட வரி இன்றி ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய சலுகை என்ன?
இந்திய குடிமகன் 3 நாட்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்தால், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சுங்க வரி இன்றி இந்தியாவிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு விமானம் அல்லது கடல் வழியாக தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வரையிலும் இனி சுங்க வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாபயணிகளுக்கு இந்த வரி சலுகையானது 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் பணி செய்பவர்களுக்கான வரி சலுகையானது, 2500 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளானது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், வெளிநாடு பயணங்களுக்கான நினைவுச் சின்ன பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். மறுவிற்பனைக்கு வாய்ப்புள்ள அதிக மதிப்புள்ள பொருட்கள் இதில் அடங்காது. வரி இல்லாத சலுகையின் கீழ் தகுதி பெற, பயணிகள் தங்கள் சொந்த கைகளில் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பைகளில் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
UAE பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்:
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு தான் பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப பயணம் அல்லது கொண்டாட்டங்களுக்கான இந்தியா வருபவர்கள் கூடுதலாக சுங்க வரி ஏதுமின்றி, மின்சாதன பொருட்கள், துணிகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான உபகரணங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். குறிப்பாக 18 வயதிற்கு மேற்பட்ட பயனர்கள் எந்தவித சுங்கவரியும் இன்றி ஒரு லேப்டாப் அல்லது நோட்புக்கை கொண்டு வரலாம். இது தொழில்நுட்பத்துறையை சேர்ந்த நபர்களுக்கு மிகப்பெரிய சலுகையாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பயணிக்கும் 2 லிட்டர் வரையிலான மதுபானம் அல்லது வைன், 100 சிகரெட்களையும் சுங்கக் கட்டணம் இன்றி கொண்டு வரலாம்.
நகைகளுக்கு கிடைத்த சலுகை என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓராண்டிற்கும் மேலாக வாழ்ந்த இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது, சுங்கக் கட்டணம் இன்றி அவர்கள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட தங்கத்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண்கள் 40 கிராம் வரையிலும், ஆண்கள் 20 கிராம் வரையிலும் சுங்கக் கட்டணம் இன்றி தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வரலாம். முன்னதாக இது எடை அடிப்படையில் இன்றி விலை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது. அதாவது பெண்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கத்தையும், ஆண்கள் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரையிலான தங்கத்தையும் கூடுதல் சுங்கக் கட்டணம் இன்றி கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். அப்படி பார்த்தால், தற்போதைய விலை மதிப்பிற்கு வெறும் 3 முதல் 6 கிராம் தங்கத்தை மட்டுமே கொண்டு வர முடியும். இந்நிலையில் திருத்தப்பட்ட புதிய விதிகளானது கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.























