(Source: ECI/ABP News/ABP Majha)
Savings For Children : குழந்தைகளுக்கான சேமிப்புக்கு சூப்பர் ஐடியா.. இந்திய அஞ்சல்துறை வழங்கும் குட்டி குட்டித் திட்டங்கள்..
அஞ்சல் அலுவலகம் வழங்கும் தொடர் வைப்புத்தொகை திட்டம், தம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கும் பெரும்பாலான பெற்றோர் தேர்ந்தெடுக்கும் சேமிப்புக் கணக்காக இந்தத் திட்டம் இருக்கிறது.
இந்தியாவின் நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த குடிமக்கள் பெரும்பாலும் அதிக லாபம் தரும் சேமிப்புத் திட்டங்களின் மூலமாகத் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தைப் பாதுகாக்க விரும்புகின்றனர். இதன் காரணமாக, பெரும்பாலும், அரசு ஆதரவு பெற்ற திட்டங்களில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். இந்த விவகாரத்தில் பெரும்பாலான மக்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும், நல்ல லாபம் அளிப்பதாகவும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் இயங்குகின்றன. நாடு முழுவதும் இந்தியா போஸ்ட் வழங்கும் திட்டங்கள் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன.
அஞ்சல் அலுவலகம் வழங்கும் தொடர் வைப்புத்தொகை திட்டங்களில் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் வழங்கப்படுகிறது. தற்போது இந்திய அஞ்சல்துறை வழங்கும் ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகை திட்டத்தை உங்கள் குழந்தைகளின் பெயரில் திறந்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தரலாம். உங்கள் குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக நீங்கள் இருப்பதன் சான்றை மட்டுமே அஞ்சல் அலுவலகத்தில் அளித்து, இந்த சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். இதன் கால அளவு 5 ஆண்டுகள்.
இதன் வட்டி விகிதம் காரணமாக, தம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கும் பெரும்பாலான பெற்றோர் தேர்ந்தெடுக்கும் சேமிப்புக் கணக்காக இந்தத் திட்டம் இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நல்ல தொகையைப் பெற விரும்பினால், தினமும் உங்கள் குழந்தையின் பெயரில் சுமார் 70 ரூபாய் சேமித்தால் போதும். மாதம் தோறும் 2100 ரூபாய் செலுத்தி வந்தால், 5 ஆண்டுகளின் முடிவில் இந்த சேமிப்புக் கணக்கில் 1.26 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இது மட்டுமின்றி, நீங்கள் சேமித்த தொகை மீதான வட்டி ஒவ்வொரு காலாண்டுக்கும் கணக்கிடப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, ஏப்ரல் முதல் இந்தத் திட்டத்திற்கு 5.8 சதவிகிதமாக வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, வட்டி தொகை மட்டும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எனவே மொத்தமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் குழந்தையின் பெயரில் 1.46 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும்.
அஞ்சலகத்தின் தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் இணைவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
தகுதி: இந்தியாவில் பிறந்து 18 வயதைக் கடந்த எவரும் தனியாகவோ, வேறு இருவருடன் இணைந்தோ இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கும் கீழான குழந்தைகளின் சார்பாக அவர்களின் பெற்றோரோ, சட்டப்பூர்வ காப்பாளரோ இந்தக் கணக்கைத் தொடங்கலாம். 10 வயதைக் கடந்த சிறாரும் தங்கள் பெயர்களிலேயே இந்தக் கணக்கு தொடங்கலாம்.
கணக்கின் வரம்புகள்: குறைந்தபட்சமாக மாதம் தோறும் 100 ரூபாய் வரை செலுத்தலாம். அதிகபட்சத் தொகை என்பது இந்தக் கணக்கிற்கு இல்லை.
பிற அம்சங்கள்: தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சேமிப்பை மேற்கொள்பவர்கள், பணம் தேவை என்னும் போது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளலாம். எனினும், வட்டி விகிதம் குறைவாகவே வழங்கப்படும். அதே போல, இந்த சேமிப்பின் ஆயுளைக் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தும் கொள்ளலாம்.