அதிக பலன்கள்.. 40 வயது முதலே தொடங்கும் காப்பீடு.. எல்.ஐ.சி பாலிசி விவரங்கள் இதோ!
ஓய்வூதியத் திட்டங்களால் கிடைக்கும் சலுகைகளை உங்கள் 40 வயதில் தொடங்கி பெறுவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. இதற்காக நீங்கள் எல்.ஐ.சியின் `சாரல் பென்ஷன் யோஜனா’ என்ற காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும்.
அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே. சாமான்ய மக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே சலுகையாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டங்களும் இவ்வாறே வழங்கப்படுகின்றன. எனினும், ஓய்வூதியத் திட்டங்களால் கிடைக்கும் சலுகைகளை உங்கள் 40 வயதில் தொடங்கி பெறுவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. இதற்காக நீங்கள் எல்.ஐ.சி என்றழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் `சாரல் பென்ஷன் யோஜனா’ என்ற காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும்.
இந்தத் திட்டத்தின் விதிமுறையின்படி, மாதந்தோறும் பணம் செலுத்துவதற்குப் பதிலாக பெரும் தொகை ஒன்றை முதலிலேயே செலுத்த வேண்டும். இந்த ஓய்வூதியத் திட்டத்தை எடுத்துக்கொள்ளும் நபருக்கு ஆயுள் கால அனுகூலங்கள் கிடைக்கின்றன. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்தை எடுத்துக் கொள்ளும் நபர், கடன் பெற நினைத்தால், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு, கடன் பெற்றுக் கொள்ளும் சிறப்பம்சமும் வழங்கப்படும்.
முந்தைய பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களில் இல்லாத சிறப்பான பல அம்சங்கள், சாரல் பென்ஷன் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. உங்கள் 40 வயது முதல் 80 வயது வரையிலான கால கட்டத்தின் போது எவ்வளவு பெரிய தொகையையும் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்து, மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு எனப் வெவ்வேறு கால அவகாசங்களின் அடிப்படையில் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படும். ஆயுள் காப்பீடு பெறுவதன் மூலம் இதில் நிச்சயமாக 100 சதவிகிதம் முதலீடு திரும்ப வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஓய்வூதியத் திட்டம் ஒரே ஒரு நபருடன் மட்டுமே இணைக்கப்படும். ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தவர் உயிருடன் இருக்கும் வரை, அவருக்குத் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்பிறகு, அவரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு முதலீட்டுத் தொகை கிடைக்கும். மற்றொரு ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகளின்படி, அது இணைந்து வாழும் ஜோடிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதில் இருவரில் அதிக ஆயுள் காலம் உயிருடன் வாழும் எவரேனும் ஒருவருக்கு அவர் மரணிக்கும் வரை ஓய்வூதியம் வழங்கப்படும். இருவரும் இறந்த பின், அவர்களால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு முதலீட்டுத் தொகை வழங்கப்படும். இந்த ஒய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கிய 6 மாதங்களுக்குப் பிறகு, முதலீடு செய்தவர் எப்போது வேண்டும் என்றாலும் கடன் பெற்றுக் கொள்ளும் அம்சம் உண்டு.
உங்கள் 40 வயதான பிறகு, நீங்கள் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், உங்களுக்கு ஆண்டுக்கு 50250 ரூபாய் வழங்கப்படும். மாதம் தோறும் 4187 ரூபாய் என்ற அடிப்படையில் இது ஆயுள் முழுவதும் வழங்கப்படும். மேலும் நீங்கள் முதலீடு செய்த தொகையை வேண்டும் எனக் கோரினால், அதில் இருந்து 5 சதவிகிதம் பிடித்தம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தைப் பெற விரும்பினால் எல்.ஐ.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, படிவங்களை நிரப்பலாம்.