Unicorn and Paytm | Paytm IPO-உம், மேலும் யுனிகார்ன் சார்ந்த சில தகவல்களும்..!
இன்னும் ஒரு சில மாதங்களில் பல நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கின்றன.
பேடிஎம் ஐபிஓ: மேலும் யுனிகார்ன் சார்ந்த சில தகவல்களும்
பேடிஎம், பாலிசி பஸார் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு செபி அனுமதி வழங்கியது. இந்திய ஸ்டார்ட் அப் உலகில் முக்கியமான நிறுவனம் இது. இந்த ஐபிஓ மூலம் 16,600 கோடி ரூபாயை திரட்ட இருக்கிறது. பாதி தொகையை புதிய பங்குகள் வெளியிடுவதன் மூலம் திரட்டுகிறது. ரூ.8300 கோடியை ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்கள் வெளியேறுகிறார்கள். கோல் இந்தியா ஐபிஓ 2010-ம் ஆண்டு வெளியானது. அப்போது அந்த நிறுவனம் ரூ.15200 கோடி திரட்டியது. அதன் பிறகு மிகப்பெரிய தொகையை திரட்டும் நிறுவனம் இதுதான் என்பதால் சந்தையில் முக்கியத்துவம் பெருகிறது. ஐபிஓவுக்கு பிறகு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.78 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபி அனுமதி கொடுத்தாலும் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. தீபாவளி சமயத்தில் இந்த நிறுவனத்தின் ஐபிஓ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனிகார்ன் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான பேடிஎம் ஐபிஓ வெளியாக இருப்பதால் மற்ற யுனிகார்ன் நிறுவனங்களுக்கும் உத்வேகம் கிடைத்துள்ளன.
இதுவரை இந்தியாவில் 72 நிறுவனங்கள் யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பு உடைய நிறுவனம்) நிலையை அடைந்திருக்கின்றன. இதில் இந்த ஆண்டு மட்டும் 32 நிறுவனங்கள் இந்த நிலையை அடைந்திருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு அதிகளவுக்கு யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றனவா என்னும் கேள்விக்கு இது தான் தொடக்கம் என ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த பத்தாண்டுகளுக்கான தொடக்கம் இப்போது உருவாகி இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே எண்ணிக்கையிலான யுனிகார்ன்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி அளவுக்கு 5 முதல் 7 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும். அப்போது தற்போதைய சூழலை விட பெரிதும் மாறுபட்டிருக்கும் என பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இரண்டு யுனிகார்ன்
ஸ்டார்ட் அப் துறையினர் கூறுவது உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. பேடிஎம் நிறுவனர் விஜய்சேகர் சர்மா. பேடிஎம் என்பது யுனிகார்ன் நிறுவனமாக உருவாகி பல ஆண்டுகள் ஆனது. இவர் தொடங்கிய மற்றொரு நிறுவனம் பேடிஎம் மால். இந்த நிறுவனமும் யுனிகார்ன் நிலையை எட்டிருக்கிறது. இவர் மட்டுமல்லாமல் மேலும் மூவர், இரண்டு யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஷாப் குளூஸ் நிறுவனத்தை தொடங்கியவர் சந்தீப் அகர்வால். இந்த நிறுவனம் கடந்த் 2016-ம் ஆண்டே யுனிகார்ன் நிலையை எட்டிவிட்டது. ஆனால் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய மற்றொரு நிறுவனம் ட்ரூம். இந்த நிறுவனமும் கடந்த ஜூலையில் யுனிகார்ன் நிலையை எட்டியது.
நவீன் திவாரி: இந்தியாவின் முதல் யுனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கியவர் இவர். இன்மொபி என்னும் நிறுவனத்தை 2007-ம் ஆண்டு தொடங்கினார். இந்த நிறுவனம் 2011-ம் ஆண்டு யுனிகார்ன் நிலையை எட்டியது. இதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு க்ளான்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனமும் சமீபத்தில் யுனிகார்ன் நிலையை எட்டியது.
பவீஷ் அகர்வால்: ஓலா நிறுவனத்தை தொடங்கியர் பவிஷ் அகர்வால். இந்த நிறுவனம் யுனிகார்ன் நிலையை எட்டி பல ஆண்டுகள் ஆனது. இதனை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சியை உணர்ந்த பவிஷ் ஓலா எலெக்ட்ரிக் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்த நிறுவனமும் யுனிகார்ன் நிலையை எட்டி இருக்கிறது.
இன்னும் ஒரு சில மாதங்களில் பல நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையை எட்டும் என கணிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் சந்தை பெரிதாகி வருகிறது. தவிர இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு முதலீட்டை எப்படி திரட்டுவது, முதலீட்டாளர்களுடன் எப்படி உரையாடுவது என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு சவாலாக இருந்தது. ஆனால் இப்போது முதலீட்டை திரட்டுவது குறித்த புரிதல் இருக்கிறது. இதைவிட பல ஸ்டார்ட் அப் நிறுவனர்களே, புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து, ஆலோசனை வழங்குகிறார்கள் என்பதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்னாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு யுனிகார்ன் நிலையை அடைவது என்பது டெஸ்ட் மேட்ச் விளையாடுவதை போல இருந்தது என நவின் திவாரி கூறியிருந்தார். தற்போது டி20 ஆக மாறுவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது.