ஆப்பிஸினஸ் என்னும் லாபமீட்டும் யுனிகார்ன்.. வணிகத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பக்கம்!
முதலீட்டாளராக இருப்பதால் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் வளர்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
யுனிகார்ன் என்பது நிறுவனத்தின் சந்தை மதிப்பை குறிப்பிடுவது. யுனிகார்ன் பட்டியலில் உள்ள அனைத்து நிறுவனங்களும் லாபம் ஈட்டும் நிறுவனங்களாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. காரணம் விரிவாக்கப் பணிகளில் இருப்பதால் லாபத்தை இலக்காக வைக்கும்போது விரிவாக்கம் நடக்கும் பணி பாதிக்கும். இருந்தாலும் சில நிறுவனங்கள் வளர்ந்து வரும் நிறுவனமாக இருந்தாலும் லாபம் ஈட்டுகின்றன. சில வாரங்களுக்கு முன்பு யுனிகார்ன் பட்டியலில் உள்ள லாபமீட்டும் நய்கா நிறுவனத்தை பார்த்தோம். தற்போது ஆப்பிஸினஸ் என்னும் லாபமீட்டும் யுனிகார்ன் நிறுவனத்தை பார்க்கலாம்.
இந்த நிறுவனம் எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு தேவையான சிமெண்ட், ஸ்டீல், பேப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வழங்குகிறது. இது தவிர விவசாய பொருட்களையும் மொத்தமாக வழங்கிறது. இது ஒரு பி2பி ஸ்டார்ட் அப். 2,000-க்கும் மேற்பட்ட சப்ளையர்களை இணைத்திருக்கிறது. டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ, செயில் உள்ளிட்ட சப்ளையர்கள் உள்ளனர். இதுதவிர மூலப்பொருட்களை வாங்குவதற்கு தேவையான கடன் உதவியையும் இந்த நிறுவனமே செய்கிறது என்பதால் சிறு நிறுவனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த முடியும்.
எப்படி உருவானது
ஆஷிஷ் மொஹபாத்ரா மற்றும் இவரது நண்பர்கள் உருவாக்கிய நிறுவனம் இது. இவர் மெக்கென்ஸி என்னும் ஆலோசனை நிறுவனத்தில் இருந்தவர். தவிர மேட்ரிக்ஸ் என்னும் வென்ச்சர் கேபிடல் நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறார். முதலீட்டு நிறுவனத்தில் இருப்பதால் பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார். இத்தனை இருந்தாலும் அனைத்தையும் விட்டுவிட்டு இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
ஒரு ஆலோசகராக, முதலீட்டாளாராக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நிறுவனத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. நீங்கள் ஆலோசனை சொல்லலாம், பெரிய சம்பளம் வாங்கலாம், உலகம் முழுவதும் பயணிக்கலாம். ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என ஆஷிஷ் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆலோசனையில்(consulting) சிந்தனைக்கு மட்டுமே வாய்ப்பு, தொழில்முனைவில் செயலுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.
முதலீட்டாளராக இருப்பதால் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் வளர்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதனால் சிறு நிறுவனங்களை ஒருங்கிணைந்து அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம் எனா தோன்றியதாக கூறுகிறார். அவர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், மார்க்கெட்டிங் மற்றும் நிதி ஆகியவற்றை ஒன்றாக வழங்குவதுதான் ஆப்பிஸினஸ்.
ஆலோசகராக இருந்திருக்கிறார், முதலீட்டு நிறுவனத்தில் இருந்தாலும் தொழில் என்று வரும் போது அவ்வளவு எளிதாக முதலீடு கிடைக்காது. 70-க்கும் மேற்பட்ட முறை இவரது ஐடியா முதலீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வளவு நாள் முதலீட்டாளராக இருந்து பல நிறுவனங்களிடம் கேள்வி கேட்ட ஆஷிஷ் தற்போது தொழில்முனைவோராக பல முதலீட்டாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்க தொடங்கினார்.
எங்களை போன்ற பிஸினஸுக்கு சர்வதேச அளவில் எந்த முன்னுதாரனமும் இல்லை. 2015-ம் ஆண்டு தொடங்கும்போது இந்த பிரிவு இவ்வளவு வளர்ச்சி அடையுமா என்பது கூட தெரியாது. யாருமே இல்லையே என்று கவலைபடுவதைவிட நாம் முன்னே செல்லலாம் என்பதற்காகதான் தொடங்கினோம் என குறிப்பிட்டிருக்கிறார். தவிர ஐவரும் எந்தவிதமான வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பணியாற்றியது இல்லை. இருந்தாலும் சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தால் மட்டுமே இந்த தொழில் வெற்றி அடையும் என்பதில் தெளிவாக இருந்தோம்.
மொத்தமாக இ-காமர்ஸ் செய்வது என்பதே கடினமானது, தவிர அதற்கு நிதியும் கொடுக்கிறீர்களே இரட்டை சுமையாக இருக்காதா என முதலீட்டாளர்கள் கேட்டிருக்கிறார். ``ஒரு தொழில் கஷ்டமாக இருந்தால் அங்கு பணம் இருக்கிறது என்று அர்த்தம். அந்ததொழில் மிகவும் கடினமாக இருந்தால் அதிக பணம் இருக்கிறது’’ என முதலீட்டாளர்களுக்கு பதில் அளித்திருக்கிறார். இதுபோல பல முதலீட்டாளர்களின் கேள்விகள், சிக்கல்களை கடந்தே நிறுவனத்தை வளர்தெடுத்திருக்கிறார்.
புதியவர்கள் மட்டுமே பணிக்கு
வழக்கமாக ஸ்டார்ட் அப் என்றாலே ஐஐஎம், ஐஐடியில் இருந்து பணியாளர்களை வேலைக்கு எடுப்பார்கள். ஆனால் இவர்களும் எம்பிஏ படித்தவர்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால் பெரிய நிர்வாக கல்லூரிகளில் படித்தவர்களை எடுக்கவில்லை. நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை புதியவர்கள். முக்கியமான பணிகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் புதியவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம். மொத்த பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இசாப் ( பங்குகள்) வழங்கப்பட்டுள்ளன. நிறுவனம் ஒவ்வொரு முறை நிதி திரட்டும்போதும் பெரும்பாலான பணியாளர்களுக்கு வெளியேறும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
நிதி சார்ந்த தகவல்கள்
2016-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நிதி திரட்டப்பட்டது. கடந்த ஏப்ரலில் 6.7 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டப்பட்டது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 80 கோடி டாலர் அளவுக்கு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 16 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டப்பட்டது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 150 கோடி டாலராக இருந்தது. தற்போது அடுத்தக்கட்ட நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 300 கோடி டாலர்கள் என்றும் இருக்கும் என தற்போதே ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆண்டுக்கு 110 கோடி டாலர் அளவுக்கு விற்பனை இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.150 கோடி அளவுக்கு லாபம் இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.450 கோடி அளவுக்கு நிகரலாபம் இருக்கும். இ-காமர்ஸ் வர்த்தகத்தில் 5-8 சதவீத லாபமும், நிதி வழங்குவதில் 18 சதவீத வருமானமும் இருக்கும் என ஆஷிஷ் தெரிவித்திருக்கிறார். இன்னும் 2 ஆண்டுகளில் ஐபிஓ கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார்.
நாங்கள் யுனிகார்ன் நிறுவனம் என்பதை விட லாபமீட்டும் நிறுவனம் என்பதே பெருமை என ஆஷிஷ் குறிப்பிட்டிருக்கிறார். சரிதானே!