LIC IPO: எல்.ஐ.சி ஐபிஓ எப்போது? பங்குச்சந்தை ஒத்துழைக்குமா?
சந்தை மதிப்பை கணக்கிட்ட பிறகு அதனை தொடர்ந்து ஒழுங்குமுறை சார்ந்த அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது. எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனம் என்பதால் ஐஆர்டிஏவின் அனுமதி தேவைபடும்
பங்குச்சந்தையில் தற்போதைய ஹாட்டாபிக் எல்.ஐ.சி. ஐபிஓதான். நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் (2022 ஜனவரி முதல் மார்ச்) எல்.ஐ.சி. ஐபிஓ வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பல சிக்கல்கள் இருப்பதால் அடுத்த நிதி ஆண்டில்தான் ஐபிஓ வெளியாகும் என ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் நடப்பு நிதி ஆண்டிலே ஐபிஓ வெளியாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
சொல்லப்படும் காரணங்கள்?
எல்.ஐ.சி.யின் சந்தை மதிப்பு ரூ10 லட்சம் கோடிக்கும் மேல். இதில் ஐந்து முதல் 10 சதவீதம் அளவுக்கு பங்குகளை விலக்கிகொள்ள மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் இதில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிகிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பை மதிப்பிடுவதில் இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. பல வகையான புராடக்ட்கள், பல இடங்களில் ரியல் எஸ்டேட் சொத்துகள், துணை நிறுவனங்கள், லாபம் உள்ளிட்ட பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டே சந்தை மதிப்பை கணிக்க வேண்டி இருக்கும். மேலும் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் கணிசமான பங்கு எல்.ஐ.சி.க்கு இருக்கிறது. இதில் சில சிக்கல் இருப்பதாக தெரிகிறது.
சந்தை மதிப்பை கணக்கிட்ட பிறகு அதனை தொடர்ந்து ஒழுங்குமுறை சார்ந்த அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது. எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனம் என்பதால் ஐஆர்டிஏவின் அனுமதி தேவைபடும். அதனை தொடர்ந்து செபியின் அனுமதி தேவை. பெரிய நிறுவனம், சந்தை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல், ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதி உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியாகாது என ஊடகங்களில் செய்தி வெளியாது. மேலும் தற்போது வெளியாகும் அனைத்து ஐபிஒகளும் பெரு வெற்றி அடையவில்லை.
மேலும் நடப்பு ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் எல்.ஐ.சி.யின் ஐபிஓ வெளியாக வேண்டும். ஆனால் எல்.ஐ.ஓ வெளியாகவில்லை என்றால் பங்கு விலக்கலுக்கான திட்டமிடப்பட்ட இலக்கையும் எட்ட முடியாது என செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை மத்திய அரசு மறுத்திருக்கிறது. எல்.ஐ.சி. ஐபிஓ திட்டமிட்டபடி நடக்கும். அதற்கான பணிகள் நடந்து வருவதாக டிஐபிஏஎம் செயலாளர் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.
37 லட்சம் கோடி சொத்துகள்
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது. ரூ.37 லட்சம் கோடி சொத்துகளை கையாளுகிறது. இதற்கடுத்து மிகப்பெரிய நிறுவனமான எஸ்பிஐ லைப் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் 2.21 லட்சம் கோடி ரூபாயை அளவுக்கு மட்டுமே கையாளுகிறது. ஒப்பீட்டளவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் இது. மேலும் இந்தியாவில் ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்ட் துறை கையாளும் தொகையை விட எல்.ஐ.சி. கையாளும் தொகை மிக அதிகம். பல நாடுகளின் ஜிடிபியை விட எல்.ஐ.சி. கையாளும் சொத்து மதிப்பு அதிகம்.
1956-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. அதனால் காப்பீட்டு சந்தையில் தவிர்க்க முடியாத சக்தியாக எல்.ஐ.சி இருக்கிறது. அதனால் எல்.ஐ.சியின் ஐபிஓவுக்கு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வெளியாகுமா அல்லது ஊடகங்களில் வெளியானதுபோல அடுத்த நிதி ஆண்டுக்கு செல்லுமா? எல்.ஐ.சி. ஐபிஓக்கு பங்குச்சந்தை ஒத்துழைக்குமா?