Cement War: யார் மன்னன்? சிமெண்டுக்கு பின்னால் நடக்கும் பணக்கார போர்..! மோதிக்கொள்ளும் அதானி - பிர்லா!
கடனை கொண்டு அடுத்தடுத்த தொழில்களை கட்டமைக்கும் வல்லமை கொண்ட கௌதம் அதானியின் தொழில் பயணம் சுவாரசியமானது.
உலகின் 9ஆவது பெரிய பணக்காரர் என்ற மிகப்பெரும் உச்சத்தை கௌதம் அதானி எட்ட 1990களில் இந்திய மேற்கு கடற்கரையில் இருந்த துறைமுகமும், அரசியல்வாதியும் தற்போதய பிரதமருமான நரேந்திர மோடியின் நட்புறவும் பெரிதும் துணை புரிந்தது. கடனை கொண்டு அடுத்தடுத்த தொழில்களை கட்டமைக்கும் வல்லமை கொண்ட கௌதம் அதானியின் தொழில் பயணம் சுவாரசியமானது.
அதானியின் அசுர வளர்ச்சி
தனது துறைமுகம் மூலம் நிலக்கரி, திரவ எரிவாயு மற்றும் பாமாயில் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரிகளை வழங்கத் தொடங்கிய அதானி, பின்னர் அத்துறை சார்ந்த சுரங்கம் மற்றும் மின்சார உற்பத்தி மற்றும் விநியோக தொழில்களில் கால்பதித்தார். இந்திய நகரங்களுக்கு குழாய் மூலம் எரிவாயுவை சப்ளை செய்யத் தொடங்கிய அவர், சூரிய மின் தகடுகள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தார். பின்னர் அந்த வணிகம், விமான நிலையங்களாகவும், தானியக்கிடங்குகளாகவும், தரவு மையங்களாகவும் விரிவடைந்துள்ளது. ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய சிமெண்ட் நிறுவனங்களில் சுவிஸ் நாட்டை சேர்ந்த ஹோல்சிம் நிறுவனம் வைத்திருந்த பங்குகளை 10.5 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியதன் மூலம் சிமெண்ட் தொழிலிலும் தனது செல்வாக்கை செலுத்த தொடங்கி உள்ளார் கௌதம் அதானி.
பிர்லா குழுமம்
இந்த சிமெண்ட் துறையில் அவருக்கு சவாலாக இருப்பவர்; அவரின் சக வணிக போட்டியாளரான முகேஷ் அம்பானி அல்ல, முகேஷ் அம்பானியை போன்றே மற்றொரு பில்லியனரான குமாரமங்கலம் பிர்லா, முதல் தலைமுறை தொழில்முனைவோரான அதானியை போல் இல்லாமல், தனது பாரம்பரியமான குடும்ப செல்வத்தை நிர்வகித்து வருபவர் குமாரமங்கமம் பிர்லா. ஜவுளி வர்த்தகத்தில் தொடங்கி, சணல் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொண்ட பிர்லாவின் தாத்தா, சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.
1947ஆம் ஆண்டுக்கு பிறகு நாடு சோசியலிச பாதைக்கு சென்றதால் பிர்லாவின் தந்தை தொழிலை நடத்த சிரமப்பட்ட நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டில் நோவல் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் உலகின் மிகப்பெரிய அலுமினியம் தயாரிப்பாளராக உருவெடுத்தார் பிர்லா. இருப்பினும் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப்பொருளாதார நெருக்கடியும், சீனாவில் ஏற்பட்ட பொருட்கள் தேவையில் பிரச்னை, தொலைத்தொடர்பு துறையில் சிக்கல் மற்றும் 2016ஆம் ஆண்டு அம்பானியின் ஜியோ வருகை உள்ளிட்டவை பிர்லாவின் தொழில் வணிக பயணத்தை பெரிதும் பாதித்தது.
சிமெண்ட் சந்தை போர்
ஜியோ வருகையால் தொம்சமான வோடோபோன் - ஐடியா நிறுவனத்தை அரசின் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்த நிலையில், இந்தியாவில் விரிவடைந்து வரும் சிமெண்ட் சந்தையில் அதானி கால் பதித்துள்ளதன் மூலம் புதிய வணிகபோர் தொடங்கி உள்ளது. பிர்லா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தனது சிமெண்ட் உற்பத்தியை ஆண்டுக்கு 22.6 மில்லியன் டன்கள் அதிகரிப்பதற்காக, 12,900 கோடி மூலதன செலவை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 75 டாலர் செலவில் ஒரு டன் சிமெண்டை உற்பத்தி செய்ய முடியும்.
அதானி கட்டுப்பாட்டில் உள்ள அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு 73 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் திறன் உள்ள நிலையில் அல்ட்ராடெக் நிறுவனத்தின் சிமெண்ட் உற்பத்தி 159 மில்லியன் டன்னாக இருக்கும். இது அதானியின் இரண்டு சிமெண்ட் நிறுவனங்களை விட இரண்டு மடங்கு அதிகம்.
விலைப்போட்டி
அதானி ப்ரிமியம் சிமெண்ட் விற்பனையில் கவனம் செலுத்தும் பட்சத்தில் பிர்லா விலையை குறித்து சவால் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தொலைத் தொடர்பு வணிகத்தில் அம்பானி நடத்திய விலைபோரால் பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஆனால் பிர்லாவின் குடும்ப வணிகமான சிமெண்ட் வணிகத்தில் அவரை வீழ்த்துவது அதானிக்கு சவாலாகவே இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் அதானி பில்லியனராக கூட இல்லாதபோது, 6.5 பில்லியன் டாலர்கள் சொத்துக்களுன் பிர்லா பில்லியனர் பட்டியலில் இடம் பெற்று இருந்தார். ஆனால் தற்போது அவர் அதானியை விட 85 பில்லியன் டாலர்கள் பின் தங்கி உள்ளார்.