Budget 2024 Expectations: மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் இதுதான்....!
மத்திய பட்ஜெட்டில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேவையானவைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 2024 - 25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் ஆனது, எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கும் வரை நடைமுறையில் இருக்கும். மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய அரசு அமைய உள்ளதால், அது வரையிலான இடைப்பட்ட காலகட்டத்திற்கு இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக மக்களை கவரும் விதமாக எதுவும் அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அந்த மாநில மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாக்குகளை பெறும் நோக்கில் இந்த பட்ஜெட் அமையும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக அரசு கால் பதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் சூழலில் அதில் ஒன்றுதான் இந்த பட்ஜெட் அமையும் என்பதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பட்ஜெட் எதிர்ப்பு குறித்து ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு குறித்து மக்களிடம் கேட்டபோது மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கூறுகையில்,
இந்திய பிரதமராக நரேந்திரமோடி 2014 -ல் பொறுப்பேற்றது முதல் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகள் பலவற்றை எடுத்துரைத்து வருகிறோம். இதுவரை செவிமடுக்காதது வருத்தம் அளிப்பதோடு, மயிலாடுதுறை தொடர்ந்து பின்தங்கிய வளர்ச்சியடையாத நிலையில் உள்ளது. இருந்த பொழுதிலும் தொடர்ந்து மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை முன் வைத்துக் கொண்டே இருக்கிறோம். அந்த வகையில் மயிலாடுதுறை தரங்கம்பாடி - காரைக்கால் ரயில்வே பாதையை மீண்டும் அமைத்து தர வேண்டும். தஞ்சாவூர் முதல் கும்பகோணம் , மயிலாடுதுறை வழியாக விழுப்புரம் இரட்டை ரயில் பாதை விரைந்து அமைத்து தர வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்னும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறைக்கு உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
மயிலாடுதுறையில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளியை அமைத்திடல் வேண்டும். மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் விசாலமான நவீன வசதிகளுடன் கட்டடம் அமைப்பதுடன் அதில் மாவட்டத்திற்கான பாஸ்போர்ட் கேந்திரா அமைத்திடல் வேண்டும். 2009-ல் திட்டமிடப்பட்ட மயிலாடுதுறைக்கான சுற்று வட்டச் சாலை தற்போதைய அத்தியாவசிய அவசியம் கருதி உடனடியாக அதற்கான மத்திய அரசின் நிதியை ஒதுக்கி விரைந்து சுற்றுவட்ட சாலை அமைத்து தர வேண்டும். மயிலாடுதுறை ராஜன்தோட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குள கட்டமைப்பு ஏற்படுத்துவதுடன் அதற்கான பயிற்சியும் இவ்வாண்டிலேயே துவங்கப்பட வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலன் கருதி மூடப்பட்டுள்ள தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீன முறையில் அமைத்திட நிதி ஒதுக்க வேண்டும்.
மயிலாடுதுறை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், அதிகமாக விளையும் நெல் கொண்டு வேலைவாய்ப்பு உருவாக்கி இயங்கும் உணவு தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் நீண்ட கடற்கரை உள்ள காரணத்தினால் இங்கே பிடிக்கப்படுகின்ற மீன்களை கொண்டு பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாக்கப்பட வேண்டும். இங்கிருந்து ஏற்றுமதிக்கு வழிவகை செய்ய வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் மற்றும் ஓசோன் நிறைந்த தரங்கம்பாடி ஆகியவற்றையும், காசிக்கு நிகரான பெருமை கொண்ட மயிலாடுதுறை துலா கட்டத்தையும், காவேரியையும் மத்திய அரசு மேம்படுத்தி சுற்றுலா மேம்பட வழிவகை செய்ய வேண்டும். நவகிரக ஸ்தலங்கள், புகழ்பெற்ற சைவத் திருமடங்கள் உள்ளடக்கிய மயிலாடுதுறை பகுதிக்கு பிரத்தியோக ரயில் வசதிகள் செய்து ஆன்மீக தொடர்புகளை வட இந்தியாவிற்கும் மயிலாடுதுறைக்கும் உருவாக்க வேண்டும்.
காவிரியில் வெள்ளகாலத்தில் திறக்கப்படும் அதிகப்படியான தண்ணீர் கடலில் வீணாக கலக்காமல் தடுத்து சேமிக்க மத்திய அரசின் நீர்வளத்துறை சார்பில் திட்டம் தீட்டி செயல்படுத்த முன்வரவேண்டும். மாப்படுகை, நீடூர் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் உடனே அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசு இந்த 2024 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 லட்சம் மக்களின் நெஞ்சில் பாலை வார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.