Amazon Jobs | 8000 பேருக்கு நேரடி வேலை காத்திருக்கு.. அமேசான் கொடுத்த அப்டேட் என்னன்னு தெரியுமா?
அமேசான்.. அந்நிறுவனத்தின் கேப்ஷனுக்கு ஏற்ப இது நம்ம கடை எனப் பலரும் நம்ப ஆரம்பித்துள்ள ஆன்லைன் ஷாப்பிங் ப்ளாட்ஃபார்ம்.
அமேசான்.. அந்நிறுவனத்தின் கேப்ஷனுக்கு ஏற்ப இது நம்ம கடை எனப் பலரும் நம்ப ஆரம்பித்துள்ள ஆன்லைன் ஷாப்பிங் ப்ளாட்ஃபார்ம்.
அந்நிறுவனம் வரும் 16 ஆம் தேதி (செப்டம்பர் 16) அன்று இந்தியாவில் முதன்முறை வேலைவாய்ப்பு மேளா ஒருங்கிணைக்கிறது. ஆனால், இந்த வேலைவாய்ப்பு மேளா ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. இது குறித்து அமேசான் கூறுகையில், இந்தியா முழுவதும் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, குர்கான், மும்பை, கொல்கத்தா, நொய்டா, அகமதாபாத், அமிர்தசரஸ், போபால், கோயமத்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், லுதியானா, புனே, சூரத் உள்ளிட்ட 35 நகரங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. கார்ப்பரேட் அலுவலகம், தொழில்நுட்பம், கஸ்டமர் சர்வீஸ், ஆப்பரேஷன்ஸ் எனப் பல பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
கேரியர் டேயில், வேலைக்கான நேர்காணலின் ஊடே அமேசான சிஇஓ ஆண்டி ஜாஸியுடன் சுவாரஸ்யமான, அனல் பறக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்களுக்கான அறிவுரையை ஆண்டி ஜாஸி வழங்குவார் எனத் தெரிகிறது. அதேபோல், அவருடைய சொந்த பணி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். அமேசானின் கார்ப்பரேட், APAC, மற்றும் MENA பிரிவின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி தீப்தி வர்மா ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்.
நாங்கள் ஏற்கெனவே 10 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாங்கள் 3 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தினோம். கன்டன்ட் உருவாக்குதல், ரீட்டெய்ல், லாஜிஸ்டிக்ஸ், உற்பத்தி எனப் பல்வேறு பிரிவுகளிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
அந்தவகையில், இந்தியாவில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் கேரியர் டேவில், வேலை வேண்டுவோருக்கு என பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புதிதாக வேலை தேடுபவர்களுக்கும், ஏற்கெனவே இருக்கும் வேலையிலிருந்து மாறுதல் தேடுபவர்களுக்கும் இது சரியான வாய்ப்பாக அமையும். அமேசானை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
இந்தியாவைத் தவிர அமேசான் முதன்முறையாக ஜப்பான், ஜெர்மனி, இத்தலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், கனடா போன்ற நாடுகளிலும் கேரியர் டே நடத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட கேரியர் டேக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்தே அதை மற்ற நாடுகளுக்கும் எடுத்துச் செல்லத் திட்டமிட்டோம் என்றார்.
கேரியர் டே நிகழ்வின் ஒருபகுதியாக, அமேசானின் 140 வேலையாட்களை பணியமர்த்தும் குழுவினர் இணைந்து 2000 இலவச ஆன்லைன் கேரியர் கோச்சிங் நிகழ்வுகளையும் நடத்துவர். அவர்கள் முதலில் வேலைக்காக நேர்காணலில் பங்கேற்பது எப்படி என்பது குறித்து பயிற்றுவிப்பர். ஆழமான அழுத்தமான ரெஸ்யூமேக்களை வடிவமைப்பது எப்படி என்பது தொடங்கி நேர்காணல் டிப்ஸ் வரைத் தருவார்கள்.
அமேசான் இந்தியாவின் தலைவரும் சர்வதேச சீனியர் வைஸ் பிரெசிடன்டுமான அமித் அகர்வால், "நாங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற துடிப்பானவர்களைத் தேடுகிறோம். இது ஒரு அரிய வாய்ப்பு. ஏன் ஒன் டைம் வாய்ப்பு என்றுகூட கூறலாம். இதைப் பயன்படுத்தி இந்தியாவை டிஜிட்டல் ரீதியாக முன்னேற்றலாம். 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் திறனை மேம்படுத்தும் பணியின் நாங்கள் கைகோர்க்க விரும்புகிறோம். அதற்காக இந்தியாவில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்" என்று கூறினார்.
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இந்த வேலைவாய்ப்பு மேளா முன்னெடுக்கப்படுகிறது. இது குறித்து டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரிதுபர்ணா சக்ரபோர்த்தி, "இந்தியாவில் வேலைவாய்ப்புகளை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இரண்டாவது காலாண்டில் 38 சதவீதம் இதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இ காமர்ஸ் நிறுவனங்களுக்கான கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சிறு தொழில்களும் தங்களுடைய பொருட்களை, சேவைகளை ஆன்லைன் தளம் வாயிலாகப் பிரபலப்படுத்தும் நுணுக்கத்தைக் கண்டு கொண்டுள்ளன. இரண்டாவது அலையில் இருந்து மீண்டுவரும் இந்திய வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் தெரிகிறது" என்று கூறினார்.
அமேசான் நிறுவனத்தில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பொறியியல், அப்ளைட் சயின்சஸ், நிர்வாக மேலாண்மை, சப்ளை செயின், ஆபரேஷன்ஸ் எனப் பல துறைகளிலும் ஆட்களைப் பணியமர்த்தியுள்ளது. உலகளவில் இந்தியா தான் அமேசானின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப கூடாரமாக உள்ளது. இந்திய அரசுடன் இணைந்து நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று அமேசான் இந்தியா கூறியுள்ளது.
வரும் மாதங்களில் உலகம் முழுவதும் 55,000 பேரை வேலையமர்த்த அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.