டாடாவின் ஏர் இந்தியா... இனி என்ன செய்யும்... எப்படி பறக்கும்? முழு தகவல் இதோ!
ஏர் இந்தியாவின் மொத்த கடன் (கடந்த ஆகஸ்ட் வரை) ரூ.61,562 கோடி. இதில் டாடா குழுமத்துக்கு எடுத்துகொண்டது போக மீதம் 46,262 கோடி கடனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.
68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா குழுமத்துக்கு வந்திருக்கிறது. சில முக்கியமான தகவல்களை பார்ப்போம்.
* ஏர் இந்தியாவுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.12,906 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது.
* ஸ்பைஸ் ஜெட் மற்றும் டாடா ஆகிய இரு நிறுவனங்களின் ஏலம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன
* டாடா குழுமத்தின் டலாஸ் ( Talace pvt ltd ) நிறுவனம் 18000 ரூபாய்க்கு கேட்டது. இதில் அரசாங்கத்துக்கு ரூ.2700 கோடி ரொக்கமாகவும், ஏர் இந்தியாவின் கடனில் ரூ.15300 கோடியும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
* ஸ்பைஸ்ஜெட் ரூ.15,100 கோடிக்கு ஏலம் கேட்டது. இதில் ரூ.2265 கோடி அரசுக்கும், ரூ.12835 கோடி கடனையும் ஏற்றுக்கொள்வதாக ஸ்பைஸ்ஜெட் கேட்டது.
* தற்போது 100 சதவீத ஏர் இந்தியா பங்குகளை டாடா குழுமம் வாங்கி இருக்கிறது. டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமல்லாமல் ரூ.15,300 கோடி கடனும் சேர்ந்தே வரும்.
* ஏர் இந்தியாவின் மொத்த கடன் (கடந்த ஆகஸ்ட் வரை) ரூ.61,562 கோடி. இதில் டாடா குழுமத்துக்கு எடுத்துகொண்டது போக மீதம் 46,262 கோடி கடனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.
* புதிய உரிமையாளரான டாடா குழுமம், ஏர் இந்தியாவில் அடுத்த ஓர் ஆண்டுக்கு 15 சதவீத பங்குகளுக்கு கீழ் குறைக்க முடியாது.
* மகாராஜா லோகோ மற்றும் ஏர் இந்தியா என்னும் பெயரை குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
* ஏர் இந்தியா நிறுவனத்தை வெளிநாட்டவருக்கு விற்க முடியாது.
* மொத்தம் 12085 பணியாளர்கள் உள்ளனர். இதில் 8084 நபர்கள் நிரந்தர பணியாளர்கள். மீதமுள்ள 4001 பணியாளர்கள் ஒப்பந்தத்தில் உள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் 5,000 நபர்கள் ஓய்வு பெற இருக்கிறார்கள்.
* அடுத்த ஓர் ஆண்டுக்கு எந்த பணியாளர்களையும் டாடா குழுமம் வெளியேற்றாது. ஓர் ஆண்டுக்கு பிறகு விஆர்எஸ் வாய்ப்பு வழங்கப்படும்.
* தினமும் ரூ.20 கோடி வரை ஏர் இந்தியாவை நிர்வகிக்க செலவாகிறது. இந்த இணைப்பு டிசம்பரில் நிறைவு பெறும். அதுவரை மத்திய அரசு இந்த செலவினை ஏற்றுக்கொள்ளும்.
* ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் 2007-ம் ஆண்டு இணைந்தன. அப்போது முதல் நஷ்டத்தை சந்தித்துவருகிறது ஏர் இந்தியா
* டாடாவுக்கு என்ன கிடைக்கும்: ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்கு, துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ( இந்த நிறுவனம் குறுகிய தூர வெளிநாட்டு பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனம்) 100 சதவீத பங்கு கிடைக்கும். மேலும் ஏர் இந்தியா எஸ்ஏடிஎஸ் (AISATS – கார்கோ கையாளும் நிறுவனம்) நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் டாடா வசம் செல்லும்.
* 2009-10 முதல் சுமார் 1.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏர் இந்தியாவுக்காக மத்திய அரசு செலவு செய்திருக்கிறது.
* 2018-ம் ஆண்டு ஏர் இந்தியாவை விற்கும் முயற்சிகள் தொடங்கின. ஆனால் அப்போது 76 சதவீத பங்குகளை மட்டுமே விற்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதனால் அப்போது யாரும் முன்வரவில்லை.
* ஏர் இந்தியா இணைந்த பிறகு இந்திய விமான போக்குவரத்து சந்தையில் 25 சதவீதம் டாடா குழுமம் வசம் உள்ளது. இண்டிகோவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் டாடா குழுமம் உள்ளது. (ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா)
* இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையிலான வழித்தடங்கள் மற்றும் பார்க்கிங் இடஙக்ள் ஏர் இந்தியாவுக்கு உள்ளன. மேலும் 120-க்கும் மேற்பட்ட பெரிய விமானங்கள் உள்ளன.
* டாடா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி சௌரவ் அகர்வால் ஏர் இந்தியா இணைப்பில் முக்கிய பங்காற்றினார். ஏர் இந்தியா தவிர குழுமத்தின் சமீபத்திய அனைத்து இணைப்புகளும் இவரது தலைமையிலே நடந்தது.
* குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் பயணம் செய்வதற்கு சிறப்பு விமானங்கள் உண்டு, முன்பு இவை ஏர் இந்தியா வசம் இருந்தது. அதனை தொடர்ந்து இவை இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் (ஐஏஎப்) கொண்டு செல்லப்பட்டது. இந்திய விமான படை விமானிங்கள் இந்த விமானத்தை இயக்குவார்கள்.
பல ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா மீண்டும் ஒரு புதிய பயணத்தை தொடங்குகிறது. டாடா குழுமம் வாங்கிய நிறுவனங்கள் அனைத்தும் வெற்றியை பெறவில்லை. ஏர் இந்தியா வெற்றிபெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இணையட்டும்.