விலை ஏறுது ஏசி! சூட்டைக் கிளப்பும் விலையேற்றம்.. ஷாக் கொடுக்கும் நிறுவனங்கள் ! காரணம் என்ன?
" இது நுகர்வோருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை."
கொரோனா பேரிடர் காரணத்தால் ஸ்மார்ட் டிவி, ஃபிரிட்ஜ் , ஏ.சி போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை அதிகரித்த நிலையில் , நிலைமை சற்று நிதானிக்க தொடங்கியது. ஆனால் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக சீனாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல உகரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரும் ஏற்றுமதி இறக்குமதிகளின் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக எரிபொருள் மற்றும் எலெக்ட்ரானிக் சிப்செட் மற்றும்உதிரிபாகங்களின் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.
இந்த தட்டுப்பாடு காரணமாக டிவி , ஏ.சி உள்ளிட்ட அத்தியாவசிய எலெக்ட்ரிக் பொருட்களின் விலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் , ஸ்மார்ட் டிவி உற்பத்தியாளர்கள் ஏற்கனவே விலையை அதிகரிக்கும் என அறிவிப்பினை வெளியிட்டனர். இந்த நிலையில் ஏ.சி உற்பத்தியாளர்களும் வரும் நாட்களின் ஏசியின் விலை 3 முதல் 4 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். ஜான்சன் கன்ட்ரோல்ஸ்-ஹிட்டாச்சி ஏர் கண்டிஷனிங் இந்தியா லிமிடெட் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " எரிபொருட்களின் விலை அதிகரிப்பு , எலெக்ட்ரானிக் மூலக்கூறுகளின் பற்றாக்குறை, பணவீக்கம், விநியோகச் சங்கிலியில் இடையூறு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் . அதோடு B2B மற்றும் B2C இடைவெளிகளுக்கான ஏர் கண்டிஷனிங்கிற்கு அதிக டிமாண்ட் இருந்து வருகிறது. இதன் காரணமாக நாங்கள் ஏ.சி-யின் விலையை வரும் நாட்களில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இது நுகர்வோருக்கு சங்கடத்தை ஏற்படுத்தினாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.ஜூன் மாதத்தில் ஏர் கண்டிஷனர் விலை 3 முதல் 4 சதவீதம் வரை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (SPPL), தலைமை நிர்வாக அதிகாரி அவ்னீத் சிங் மர்வா கூறுகையில் "இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ரஷ்யா-உக்ரைன் போர், கோவிட் நிலைமை, சீனாவில் மீண்டும் லாக்டவுன் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி போன்ற பல சவால்கள் உள்ளன. இதனால் உற்பத்தி பற்றாக்குறையால் போராட வேண்டிய நிலை உள்ளது. இதன் விளைவாக, மூலப்பொருள் மற்றும் பொருட்களின் விலைகள் 20 சதவீதம் உயர்ந்துள்ளன.எனவே தாம்சன் நிறுவனம் இனி உற்பத்தி விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது ஜூன் - ஜூலை மாதங்களில் அமலுக்கு வரும் . 3 முதல் 5 சதவிகிதம் வரையில் உயர வாய்ப்பிருக்கிறது " என தெரிவித்துள்ளார்.
PLI திட்டங்கள் மற்றும் பிற முன்முயற்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.