ABP Explainer: ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன? எதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூடுகிறது?
தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆன்று தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளைக் கடந்துள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது சந்திப்பு நேற்று சண்டிகரில் தொடங்கியது.
தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான வழிமுறைகள் பல்வேறு மாற்றங்களைக் கடந்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்காக ஜிஎஸ்டி பங்கீடு, கூடுதல் வரி விதிப்பு முதலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஜிஎஸ்டி கவுன்சில் என்றால் என்ன?
கடந்த 2016ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் இரு அவைகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 122வது சட்டதிருத்த மசோதாவின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. சுமார் 15 மாநிலங்களின் சட்டமன்றங்களில் இந்த சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது.
சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் சட்டப்பிரிவின் 279ஏ(1)-ன்படி குடியரசுத் தலைவரால் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான மன்றமாக ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் உறுப்பினர்களாக மத்திய நிதியமைச்சர் தலைவராகவும், மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாகவும் செயல்படுவர். மேலும், மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக தங்கள் அமைச்சர்களை நியமிக்கலாம்.
ஜிஎஸ்டி கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டது?
இந்திய அரசியலமைப்பின் 279வது சட்டப்பிரிவின்படி, ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய விவகாரங்களில் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வெவ்வேறு சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு குறித்த தீர்மானங்களும் இங்கே முடிவு செய்யப்படுகின்றன. உதாரணமாக, கேசினோக்கள், ஆன்லைன் கேமிங், குதிரை பந்தயம் முதலானவை மீது 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்குமாறு அமைச்சர்கள் குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன்மீதான முடிவு ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த முறை என்ன மாறியிருக்கிறது?
கடந்த மே மாதம், உச்ச நீதிமன்றம் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் முழு முடிவானவை அல்ல எனக் கூறியதையடுத்து முதல் முறையாக கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறியதில், 246ஏ சட்டப்பிரிவு என்பது நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரத்தை அளிப்பதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையைத் தமிழ்நாடு, கேரளா முதலான மாநிலங்கள் வரவேற்றதுடன், தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப பரிந்துரைகளை மாற்றிக் கொள்ளும் உரிமை வேண்டும் எனக் கோரியிருந்தன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்