Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5 EV; இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் VF5 எனும் புதிய மின்சார கார் மாடலை அறிமுகப்படுத்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Vinfast VF5 EV: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய VF5 மின்சார கார் மாடல், உள்ளூரில் டாடா நிறுவனத்தின் டியாகோ அல்லது பஞ்ச் கார் மாடலுடன் போட்டியிட உள்ளது.
வின்ஃபாஸ்ட் VF5 கார் மாடல்:
வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனம் நடப்பாண்டில் லிமோ க்ரீன் 3 வரிசை இருக்கைகளை கொண்ட MPV-யை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதோடு சப்-காம்பாக்ட் VF3-ஐ சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில் தான், வியட்நாமிய EV பிராண்ட் VF5 ஹேட்ச்பேக்கையும் இந்திய சந்தைக்கு கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறதாம். வின்ஃபாஸ்டின் சர்வதேச போர்ட்ஃபோலியோவில் மேற்கூறிய VF3 மற்றும் பெரிய VF6 SUV- க்கு இடையில், VF5 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் சந்தைப்படுத்தப்படும்போது டாடா டியாகோ EV அல்லது பஞ்ச் EV உடன் போட்டியிடலாம்.
வின்ஃபாஸ்ட் VF5 - பேட்டரி, ரேஞ்ச்
வின்ஃபாஸ்ட் VF5 ஏற்கனவே அதன் சொந்த சந்தையான வியட்நாம் மட்டுமின்றி இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் விற்பனையில் உள்ளது. இருப்பினும், இந்த முழு மின்சார ஹேட்ச்பேக்கின் பேட்டரி ஆப்ஷன்கள் சந்தைக்கு ஏற்ப மாறுகின்றன. சில நாடுகளில் VF5 29.6kWh பேட்டரி பேக் கொண்டு 95hp/135Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. முன்புற ஆக்சிலில் மோட்டார் பொருத்தப்பட்டு, 268 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்குகிறது. மற்ற சில நாடுகளில் VF5 37.23kWh பேட்டரி பேக்கை கொண்டு 136hp/135Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதே முன்புறம் பொருத்தப்பட்ட மோட்டாரை கொண்டு 326km ரேஞ்சை வழங்குகிறது.

வின்ஃபாஸ்ட் VF5 - வெளிப்புற வடிவமைப்பு
3,967மிமீ நீளம், 1,723மிமீ அகலம், 1,579மிமீ உயரம் மற்றும் 2,514மிமீ வீல்பேஸ் கொண்ட வின்ஃபாஸ்ட் VF5, டாடா பஞ்ச் ஈவியை விட 19மிமீ குறுகலாகவும் 54மிமீ உயரம் குறைவாகவும் உள்ளது. இருப்பினும், 69மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது மற்றும் டாடா மாடலை விட ஒட்டுமொத்தமாக 110மிமீ நீளமாகவும் உள்ளது. சர்வதேச-ஸ்பெக் மாடலானது 169மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸையும், 260 லிட்டர் பூட் வசதியையும், 1,340 கிலோ எடையையும் கொண்டுள்ளள்ளது. பின்புற இருக்கைகளை 60:40 ஆக மடிப்பதன் மூலம் பூட் ஸ்பேஸை 900 லிட்டராக அதிகரிக்க முடியும்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, VF5 வழக்கமான வின்ஃபாஸ்ட் முன்பக்கத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஹேட்ச்பேக்காக இருந்தாலும், இது சில SUV போன்ற டச்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் பம்பர்களை இணைக்கும் கருப்பு பாடி கிளாடிங் போன்றவை உள்ளன. இந்தோனேசியா-ஸ்பெக் மாடலில் வீல் கவர்களுடன் கூடிய 16-இன்ச் ஸ்டீல் வீல்கள் கிடைத்தாலும், வியட்நாமிய-ஸ்பெக் எடிஷன் 17-இன்ச் அலாய் வீல்களில் இயங்குகிறது.

வின்ஃபாஸ்ட் VF5: உட்புறம், அம்சங்கள்
சர்வதேச-ஸ்பெக் VF5 இன் 5-சீட் கேபினில் டேஷ்போர்டில் ஆல் ப்ளாக் தீமில் சில்வர் ஹைலைட்ஸ்கள், ஏசி வென்ட்கள், மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட்டைப் பற்றி பேசுகையில், ஓட்டுனர் சார்ந்த 8-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், மேலும் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவும் உள்ளது. 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஒரு PM2.5 ஏர் ஃபில்டர், லெதரெட் சீட் கவர்கள், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, ஆட்டோ முகப்பு விளக்குகள் மற்றும் முன் & பின்புற USB போர்ட்கள் ஆகியவை சஅடங்கும்.

வின்ஃபாஸ்ட் VF5: விலை விவரங்கள்
வின்ஃபாஸ்டின் VF5 கார் மாடல்கள் உள்ளூரில் சந்தைப்படுத்தப்பட்டால், அதன் விலைகள் ரூ.12 லட்சத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வின்ஃபாஸ்ட் VF5 இன் விலை, இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் வழிமுறையை பொறுத்தது. 25kWh பேட்டரியுடன் கூடிய Tata Punch EV தற்போது ரூ.9.99 லட்சம் முதல் 12.84 லட்சம் வரை விலையில் உள்ளது. அதே நேரத்தில் நீண்ட தூர 35kWh எடிஷன் விலை ரூ.12.84 லட்சம்14.14 லட்சம் வரை நீள்கிறது. இதற்கிடையில், Tata Tiago EV 19.2kWh பேட்டரி எடிஷன்கள் ரூ.7.99 லட்சம் முதல் ரூ.8.99 லட்சம் வரை விலையில் உள்ளன. மேலும் அதன் 24kWh எடிஷன்களின் விலை ரூ.10.14 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை உள்ளது.





















