Upcoming CNG Cars: மைலேஜ் தான் முக்கியமா? புது சிஎன்ஜி எடிஷனில் உங்க ஃபேவரட் SUV-க்கள் - டக்கரான அப்கிரேட்
Upcoming CNG Cars In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள சில கார் மாடல்கள், விரைவில் சிஎன்ஜி எடிஷனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Upcoming CNG Cars In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிஎன்ஜி எடிஷனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ள சில கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சிஎன்ஜி கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கம்ப்ரெஷ்ட் நேட்சுரல் கேஸ் எனப்படும் சிஎன்ஜி, சிறந்த மாற்று எரிபொருளாக உருவெடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை, டீசல் வாகன விற்பனையை காட்டிலும் அதிகமாக ஒருமுறை பதிவாகியுள்ளது. இந்த வாகனங்கள் மீது மக்கள் அதிக கவனம் செலுத்துவதற்கு மலிவு விலை, எரிபொருள் செயல்திறன் ஆகியவையே முக்கிய காரணங்களாகும். கடந்த சில ஆண்டுகளாகவே பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள, தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷன் வாகனங்களை சிஎன்ஜி வடிவில் சந்தைப்படுத்தப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் விரைவில் அறிமுகமாக உள்ள 3 பிரபலமான கார் மாடல்களின் சிஎன்ஜி எடிஷன்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
1. ஸ்கோடா கைலாக் சிஎன்ஜி
ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனத்திற்கு தற்போதைய சூழலில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக கைலாக் உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 5 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகின்றன. ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் இயக்குனரான ஆஷிஷ் குப்தா அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், “கைலாக்கின் சிஎன்ஜி எடிஷனை அறிமுகப்படுத்துவது பரிசீலனையில் உள்ளது, ஆனால் அது உடனாடியாக நடைபெறாது” என தெரிவித்துள்ளார். தங்களது டர்போ பெட்ரோல் இன்ஜின் சிஎன்ஜி எரிபொருளில் செயல்படுமா? இல்லையா? என்பது குறித்து ஸ்கோடா நிறுவனம் மதிப்பாய்வு செய்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் ஸ்கோடாவின் கைலாக் கார் மாடல் ரூ.8.25 லட்சம் முதல் ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2. டாடா கர்வ் சிஎன்ஜி
டாடா சார்பில் அதிகம் விற்பனை செய்யப்படும் காம்பேக்ட் எஸ்யுவி ஆன, பஞ்சின் சிஎன்ஜி எடிஷன் புனேவில் கடந்த மாதம் சாலை பரிசோதனையில் ஈடுபட்டு இருந்தபோது அடையாளம் காணப்பட்டது. இந்த காரானது ஏற்கனவே நெக்ஸான், ஆல்ட்ரோஸ் மற்றும் டியாகோ டிஎன்ஜி எடிஷனில் உள்ள, டாடாவின் ட்வின் சிலிண்டர் டெக்னாலஜியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தைக்கு கொண்டு வரப்பட்டால் டாடா நெக்ஸானுக்கு அடுத்தபடியாக, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் என நான்கு எடிஷன்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இரண்டாவது பயணிகள் வாகனம் என்ற பெருமை கர்வ் காரு மாடலுக்கு கிடைக்கும். வரும் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படும் கர்வ் சிஎன்ஜி எடிஷனின் தொடக்க விலை சுமார் ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். சிஎன்ஜி எடிஷனில் ஸ்டேண்டர்டான மேனுவல் கியர்பாக்ஸ் உடன், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 15 முதல் 17 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கலாம். இந்த காரானது சிங்கிள் சிலிண்டர் செட்-அப்பை கொண்ட மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் உடன் நேரடியாக போட்டியிடும்.
3. கியா காரென்ஸ் சிஎன்ஜி
கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் சிஎன்ஜி எடிஷன் கார் மாடலாக, நடப்பாண்டு இறுதிக்குள் காரென்ஸ் கிளாவிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இதனை நிறுவனத்தின் மூத்த துணை தலைவரான ஹர்திப் சிங் ப்ரார், செய்தியாளர் சந்திப்பின்போது உறுதிப்படுத்தினார். அதன்படி, ”சிஎன்ஜி எடிஷன்கள் அதிகரித்து வரும் நிலையில் நாங்களும் அதில் பணியாற்றி வருகிறோம். நாங்கள் சிஎன்ஜி எடிஷனை அறிமுகப்படுத்தும்போது, அது எங்களது மற்ற அனைத்து வாகனங்களையும் போன்றே மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும். எங்களது சோதனைகள் வெற்றியை கொடுத்தால், நாங்கள் காரென்ஸை சந்தைப்படுத்துவோம்” என ப்ரார் குறிப்பிட்டார். அப்படி வரும்போது, காரென்ஸ் கிளாவிஸ் சிஎன்ஜி எடிஷனானது, மாருதியின் எர்டிகாவுடன் நேரடியாக போட்டியிடும். கிலோவிற்கு 15 முதல் 19 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















