TVS Ronin 225cc: டிவிஎஸ் இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றாங்க! இதைப் படிங்க முதல்ல..
இந்த பைக் பார்க்க 'க்ரூசர்' பைக் போல இருந்தாலும் இதனுடைய வட்ட வடிவ ஹெட்லைட் டிசைன் 'ரெட்ரோ' பைக்குகளை நினைவுபடுத்துகிறது!
டிவிஎஸ் தன்னுடைய ரோனின் பைக்கை அறிமுகப்படுத்தியிருக்காங்க. இந்த பைக் SS, DS மற்றும் TD அப்படின்னு மூன்று வேரியண்ட்களில் வருகிறது.
புதிய டிவிஎஸ் ரோனினோட விலை குறைவான வேரியண்ட்டான SS-ன் விலை ரூ.1.49 லட்சம், இது மேக்மா ரெட் மற்றும் லைட்னிங் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இதற்கு அடுத்த மிட் வேரியண்ட்டான DA-ன் விலை ரூ. 1.56 லட்சம், இது ஸ்டார்கேஸ் பிளாக் மற்றும் டெல்டா ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.டிவிஎஸ் ரோனினோட டாப் வேரியண்ட் TD-ன் கேலக்டிக் கிரே மாடல் ரூ.1.68 லட்சமாகவும், டான் ஆரஞ்ச் நிற மாடல் ரூ.1.71 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (விலைகள் அனைத்தும் எக்ஸோரூம்)
எப்படி இருக்கிறது டிவிஎஸ் ரோனின்?
டிவிஎஸ் ரோனின் எந்த வகையான பைக் என்று நீங்கள் கண்டுபிடிக்க கொஞ்சம் நேரம் ஆகும். நீளமான இந்த பைக் பார்க்க 'க்ரூசர்' பைக் போல இருந்தாலும் இதனுடைய வட்ட வடிவ ஹெட்லைட் டிசைன் 'ரெட்ரோ' பைக்குகளை நினைவுபடுத்துகிறது. பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு 'கஃபே ரேசர்' ரக பைக்குகள் போலவும், ஸ்பீடோமீட்டர் கன்சோல் மற்றும் ஹேண்டில்பார் ஆகியவை 'ஸ்க்ராம்ப்ளர்' ரக பைக்குகள் போலவும், கால் வைத்து ஓட்டுகிற ரைடிங் பொசிஷனும் எக்ஸாஸ்ட் டிசைனும் ஒரு 'ஸ்போர்ட்டி கம்யூட்டர்' பைக்குகள் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை டிவிஎஸ்-ன் நியோ ரெட்ரோ பைக் அல்லது மாடர்ன் கிளாசிக் பைக் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா கமர்ஷியல் மசாலா ஆக்சன் படம் பார்த்த ஒரு ஃபீல். வாழ்த்துகள் டிவிஎஸ்!
ரெட்ரோ பிரிவில் கோலோச்சி வந்த ராயல் என்ஃபீல்டுக்கு சமீப காலங்களில் ஹோண்டா CB350, ஜாவா மற்றும் யெஸ்டி போன்ற புதிய சவால்கள் உருவாகின. இந்த மாடர்ன் கிளாசிக் பைக் மார்கெட் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இதை புரிந்து கொண்ட டிவிஎஸ் தன்னுடைய ரோனின் பைக்கையும் இதில் களமிறக்கியுள்ளது.
பவர் மற்றும் சிறப்பம்சங்கள்:
225cc இஞ்சின் அதிகபட்சமாக 20 bhp ஆற்றலையும், 20 Nm டார்க்கையும் வழங்குகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்சுடன் வரும் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 120 கிமீ. முன்பக்கத்தில் அப்சைட் டவுன் (USD) ஃபோர்க்குகள், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன். இரண்டு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. SS வேரியண்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்-ம் DS மற்றும் TD வேரியண்ட்களில் டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் கிடைக்கிறது.
வட்ட வடிவ ஹெட்லேம்ப் மற்றும் ரியர் வியூ மிரர்கள், அழகாக செதுக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் மற்றும் அகலமான ரெட்ரோ ஸ்டைலிங் பின்புற மட்கார்டுடன் எல்இடி டெயில் லேம்ப் ஒட்டுமொத்த வடிவமைப்புடன் பொருத்திப் போகிறது. டூயல்-டோன் கலர் தீம், கோல்டன் ஃபினிஷில் உள்ள அப்சைட் டவுன் (USD) ஃபோர்க்குகள், தட்டையான சீட்டுடன் ரெட்ரோ கிராப்ரைல் மற்றும் கிராஷ்கார்ட் ஆகியவை ஸ்டாண்டர்டாக வருகிறது. பைக்கின் கீழ் பகுதியில் எஞ்சின், பெல்லி பான் மற்றும் எக்ஸாஸ்ட் போன்றவைகளுக்கு கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. டூயல்-டோன் ஃபினிஷில் 17" இன்ச் அலாய் வீல்கள் கண்களை கவர்கிறது. டிவிஎஸ் ரோனினுடைய ஒட்டுமொத்த எடை 160 கிலோ.