TVS Jupiter 125 | டிவிஎஸ் நிறுவனம் வெளியிடும் புதிய 125சிசி ஸ்கூட்டர்... அக்டோபர் 7 வெளியீடு!
டி.வி.எஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய மாடல் வாகனங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. `டி.வி.எஸ் ஜூபிட்டர் 125’ என்ற பெயரில் கியர்லெஸ் ஸ்கூட்டர் வரும் அக்டோபர் 7 அன்று இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது.
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்குப் புதிய மாடல் வாகனங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டி.வி.எஸ் நிறுவனம் புதிதாக 125சிசி மோட்டார் சைக்கிளான `டி.வி.எஸ் ரெய்டர் 125’ என்ற பெயரில் இந்தியாவில் வெளியிட்டது. தற்போது இந்தியாவில் 125சிசி என்ஜின் கொண்ட கியர்லெஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. `டி.வி.எஸ் ஜூபிட்டர் 125’ என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த ஸ்கூட்டர் பற்றிய டீசரை டி.வி.எஸ் நிறுவனம் தங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கியர்லெஸ் ஸ்கூட்டர் வரும் அக்டோபர் 7 அன்று இந்தியாவில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் 125சிசி மாடலில் புதிதாக இரண்டு மாடல்களை வெளியிடுவதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதில் ஒன்று `டி.வி.எஸ் ரெய்டர் 125’ என்ற வாகனத்தை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாடலாக `டி.வி.எஸ் ஜூபிட்டர் 125’ ஸ்கூட்டர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இரண்டு டீசர்கள், டி.வி.எஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. `டி.வி.எஸ் ஜூபிட்டர் 110’ மாடல் ஸ்கூட்டரின் விளம்பரத் தூதரான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தற்போது வெளியிடப்பட்டுள்ள இரு டீசர்களுள் ஒன்றில் நடித்துள்ளார்.
புதிதாக வெளியிடப்படும் டி.வி.எஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரில் புதிய ஸ்டைலிங் அம்சம் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள ஜூபிட்டர் 110 மாடலில் உள்ள சில அம்சங்களும் இதில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இளைஞர்களைக் குறிவைத்து, Ntorq 125 என்ற பெயரில் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகவுள்ள டிவிஎஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டர் பெரும்பாலும் குடும்பங்களைக் குறிவைத்து வெளியிடப்படவுள்ளது. அதனால் இது சிறிது பெரியளவிலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் முன்பக்கத்தில், இரண்டு பெரிய எல்.இ.டி விளக்குகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சீட்டுக்கு அடியிலான காலியிடத்தில் பெரியளவிலான ஹெல்மெட் வைப்பதற்கான இடம் இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
டிவிஎஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டரின் துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் ஸ்கூட்டரில் NTorq 125 மாடலின் என்ஜின் சேர்க்கப்பட்டு, குடும்பத்துடன் எளிதாகப் பயணிப்பதற்காக வடிவமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 7 அன்று, இந்தப் புதிய டிவிஎஸ் ஜூபிட்டர் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இது Hero Maestro Edge 125, Honda Activa 125, Suzuki Access 125 முதலான பிற நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.