Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
நாட்டில் வாகனங்களின் விற்பனை சீராக அதிகரித்து வருகிறது. நவம்பர் 2025-ல் எந்த கார்களுக்கு அதிக தேவை இருந்தது, எந்த நிறுவனங்களின் வாகனங்கள் முதல் 5 இடங்களை பிடித்தன என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மில்லியன் கணக்கான கார்கள் விற்பனையாகின்றன. ஆனால் சில மாடல்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடையே சிறந்த தேர்வாகவே உள்ளன. நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய தரவுகள், டாடா, மாருதி மற்றும் ஹூண்டாய் கார்கள் மீண்டும் விற்பனையில் சிறப்பாகச் செயல்பட்டதைக் காட்டுகின்றன. இந்தியாவில் எந்த ஐந்து கார்கள் அதிக தேவையில் உள்ளன என்பதை பார்க்கலாம்.
டாடா நெக்ஸான் (TATA Nexon)
நவம்பர் 2025-ல் டாடா நெக்ஸான் மீண்டும் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த எஸ்யூவி 22,434 யூனிட்டுகளை விற்று, நாட்டின் நம்பர் ஒன் காராக மாறியுள்ளது. நெக்ஸானின் புகழ், அதன் வலுவான பாதுகாப்பு மதிப்பீடுகள், பெட்ரோல்-டீசல்-ஈவி பவர்டிரெய்ன் விருப்பங்களின் மூலமும், புதுமையான வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் காரணமாகவும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. விற்பனையும் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடும்போது, 46 சதவித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது கார் சந்தையில் அதன் வலுவான இருப்புக்கு சான்றாகும்.
மாருதி டிசையர் (Maruti Dzire)
காம்பாக்ட் செடான் பிரிவில் மாருதி டிசையர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நவம்பர் 2025-ல் 21,082 யூனிட்டுகள் விற்பனையாகி, நாட்டில் இரண்டாவது சிறந்த விற்பனையான காராக இது அசத்தியுள்ளது. டிசையரின் பிரபலத்திற்கு, முதன்மையாக அதன் அதிக மைலேஜ், வசதியான கேபின் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் காரணமாகும். விற்பனை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க 79 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது செடானுக்கான வலுவான தேவையை நிரூபிக்கிறது.
மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift)
இந்திய குடும்பங்கள் மற்றும் இளைஞர்களிடையே மாருதி ஸ்விஃப்ட் இன்னும் விருப்பமான ஹேட்ச்பேக் காராக உள்ளது. கடந்த மாதம், இது 19,733 யூனிட்டுகள் விற்பனையுடன், மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஸ்போர்ட்டி வடிவமைப்பு, நன்கு ரிஃபைன் செய்யப்பட்ட எஞ்சின் மற்றும் சிறந்த எரிபொருள் திறன் ஆகியவற்றின் சிறந்த கலவையாக உள்ளதால், ஸ்விஃப்ட் வாடிக்கையாளர்களிடையே அதிக தேவையில் உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடும் போது, மாருதி ஸ்விஃப்ட் விற்பனை 34 சதவிதம் அதிகரித்துள்ளது.
டாடா பஞ்ச் (TATA Punch)
டாடா பஞ்ச், ஒரு மைக்ரோ எஸ்யூவியாக இருந்தாலும், ஒரு பெரிய எஸ்யூவி போல உணர வைக்கிறது. நவம்பரில், இந்த கார் 18,753 யூனிட்டுகள் விற்று, இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பஞ்ச்சின் தேவை அதன் 5-நட்சத்திர பாதுகாப்பு, சிறந்த வடிவமைப்பு மற்றும் மலிவு விலை ஆகியவற்றால் உந்தப்படுகிறது. விற்பனை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில், 21 சதவீதம் வளர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த தேர்வாக அமைகிறது.
ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta)
பல மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் SUV கார்களில் ஹூண்டாய் க்ரெட்டாவும் ஒன்று. கடந்த மாதம், 17,344 கார்களை விற்பனையாகி, ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. க்ரெட்டாவின் பலம், அதன் சிறப்பு அம்சங்களுடன் கூடிய கேபின், மென்மையான ஓட்டுநர் அனுபவம் மற்றும் பல எஞ்சின் விருப்பங்கள் ஆகும். விற்பனை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடும்போது, 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த ஐந்து கார்கள் தான் இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. கார் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், கார் நிறுவனங்கள் போட்டி போட்டு சிறப்பம்சங்களை வழங்கி வருகின்றன. அதே சமயம், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்துள்ளதால், எல்லா நிறுவனங்களுமே அதிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. வரும் நாட்களில் பண்டிகை கால சலுவைகள் கிடைக்கும் என்பதால், கார் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















