Tata Avinya: எலெக்ட்ரிக் வாகன உலகின் ராஜாவாகிறதா டாடா நிறுவனம்? புதிய 'அவின்யா' மாடல் வெளியீடு!
அவின்யா என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும். இதற்கு தமிழில் புதுமை என்பது பொருள் ஆகும். பெயருக்கு ஏற்பவே புதுமையான தோற்றம் மற்றும் அம்சங்களுடன் அவின்யா கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மின்சார வாகன விற்பனையில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது என கூறலாம். நிறுவனத்தின் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி ஆகிய இரு எலெக்ட்ரிக் கார்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த மின்சார கார்களை தனிநபர் பயணிகள் வாகன பிரிவில் டாடா விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவ்விரு எலெக்ட்ரிக் கார்களின் வரிசையில் இன்னும் சில மின்சார கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் சேர்க்க இருக்கின்றது.
ஜென்2 தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் அல்ட்ராஸ் இவி எலெக்ட்ரிக் காரை அடுத்ததாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, டாடா. இதுமட்டுமின்றி அடுத்த இரு வருடங்களில் 10 வகையான எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிட இருக்கிறது. அந்த வகையில், தனது எதிர்கால வாகன மாடல் ஒன்றை டாடா மோட்டார்ஸ் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. அவின்யா (AVINYA Concept) எனும் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலையே நிறுவனம் இன்று (ஏப்ரல் 29) உலகளவில் வெளியிட்டுள்ளது. அவின்யா என்பது சமஸ்கிருத வார்த்தை ஆகும். இதற்கு தமிழில் புதுமை என்பது பொருள் ஆகும். பெயருக்கு ஏற்பவே புதுமையான தோற்றம் மற்றும் அம்சங்களுடன் அவின்யா கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் அவின்யா எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை ஜென்3 ஆர்கிடெக்சரில் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் அல்ட்ராஸ் காரை விட அதிக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார்கள் இடம் பெற்றிருக்கும் என்பது தெரிகின்றது. இதுமட்டுமின்றி தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த கார் 500 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், அவின்யா இப்போதே பலரை ஈர்த்திருக்கிறது.
2025-க்குள் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வர முயற்சித்து வருவதால், இந்த காரை சாலையில் காணும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், டாடா நிறுவனம் இதனை இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கொண்டு செல்ல இருக்கின்றது. அதனால் அவின்யாவை தற்போது உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. மேலும், சர்வதேச சந்தைக்கு ஏற்ப காரை வடிவமைத்திருக்கின்றது. இக்காரின் உட்புறத்தில் எஸ்யூவி கார்களுக்கு இணையான தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் வசதிகளும், எம்பிவி கார்களுக்கான இணையான இட வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
டாடா நடப்பாண்டில் வெளியிடும் இரண்டாவது எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல் இதுவாகும். சமீபத்தில் கர்வ் எனும் எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை அது அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் இவ்வாறு தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல்களை வெளியிட்டு வருவது, அந்நிறுவனம் விரைவில் இந்திய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி உலகை முழுமையாக ஆள இருப்பதை குறிக்கிறது. இந்த அவின்யா கார், 4.3 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதால் மிக தாராளமான இடவசதியை கொண்டிருக்கும் என்பது தெரிகிறது. இதுமட்டுமின்றி அதன் முகப்பு பகுதியில் நீளமான வடிவத்தில் எல்இடி லைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுவே டாடாவின் டிஜிட்டல் லோகோவாக பிரதிபலிக்கின்றது. அந்த எல்இடி விளக்கிற்கு கீழே பம்பர் பெரிய அளவில், அழகாக இடம் பெற்றிருக்கின்றது. இவை அனைத்தும் டாடா அவின்யாவிற்கு அற்புதமான கவர்ச்சித் தோற்றத்தை வழங்குகின்றன. மேலும், காரில் சுலபமாக ஏறி-இறங்குவதற்கு ஏதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இடம் பெறுவதைப் போன்ற கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கதவுகள் றெக்கைகள் விரிப்பதைப்போல் மேல் வாக்கில் திறக்கும். அவின்யாவின் பின் பகுதியும் அதிக கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.
முகப்பு பகுதியில் இருப்பதைப் போலவே பின் பக்கத்திலும் மின் விளக்கினாலான டிஜிட்டல் லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது சிவப்பு நிறத்தில் எரிகிறது. காரின் உட்புறம் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. வழக்கமான கார்களைப் போல் இதன் உட்புறம் இல்லை. அதிக ஆப்ஷன்கள் அவின்யாவின் டேஷ்போர்டில் இல்லை. காரின் ஸ்டியரிங்கில் ஓர் திரையும், டிரைவருக்காக ஓர் திரை இடது பக்கத்திலும், டிரைவர் பக்கத்தில் ஓர் திரையும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பின்னிருக்கையாளர்களுக்கென தனி தனி திரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், சவுண்ட் பார் ரக ஸ்பீக்கர்கள் அனைத்து திரைக்கும் தனித்தனியாகவும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வெளிப்புறத்தக் காண உதவும் கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை டிரைவரின் கவனத்தை திசை திருப்பாமல் வெளிப்புறத்தில் நடக்கும் அனைத்தையும் காருக்குள் இருக்கும் திரையின் வாயிலாகவே காண்பித்துக் கொடுக்கும்.
இதுபோன்ற ஹை எண்ட் அம்சங்கள், இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற எண்ணத்தை இந்தியர்கள் மத்தியில் தூண்டியிருக்கின்றது. குறிப்பாக மின்சார கார் பிரியர்கள் மற்றும் டாடா கார் பிரியர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.