Royal Enfield Electric Bike: ”இன்னும் ரெண்டே வருஷம்தான்”.. மின்சார பைக்கின் சோதனை ஓட்டத்தை தொடங்கிய ராயல் என்ஃபீல்ட்
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிள் வாகனத்தை அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார மோட்டார் சைக்கிள் வாகனத்தை தங்களது பொறியாளர்கள் ஓட்ட தொடங்கிவிட்டதாக, ராய்ல் என்ஃபீல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய காரணமாகும். அந்த வரிசையில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் களமிறக்கி வரும் ராயல் என்ஃபீல்டு, அடுத்ததாக மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே வாடிக்கையாளர்கள் இடையே நன்கு அறிமுகமான ஹிமாலயன் மாடல் மோட்டார் சைக்கிளை, மின்சார வேரியண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான் விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
”இன்னும் 2 வருடங்கள்”
இந்நிலையில் தான் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என, அதன் தாய் நிறுவனமான் ஈச்சரின் தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது மின்சார வாகன மாதிரிகளை சோதித்து வருவதாகவும், அதேநேரம் மின்சார வாகன வணிகத்தில் உள்ள வியாபார வாய்ப்புகளை ஒரு குழு ஆராய்ந்து வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
1.5 லட்சம் யூனிட்:
மின்சார வாகன உற்பத்தி தொடர்பாக பேசிய ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கோவிந்தராஜன் பேசுகையில், மின்சார வாகன துறையில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் சுமார் 100 பேரை நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது. தற்போதுள்ள வசதியில் 1 முதல் 1.5 லட்சம் யூனிட் வரை மின் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
வடிவமைப்பு விவரங்கள்:
ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக், உள்நாட்டில் 'எல்-பிளாட்ஃபார்ம்' என அழைக்கப்படும் புதிய 96V கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Electrik01 கான்செப்ட்டில் இருந்த வடிவமைப்புகள், புதிய மின்சார ஹிமாலயன் வேரியண்டில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வெளியான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கான்செப்ட் படங்களின் அடிப்படையில், அதில் பெரிய பேட்டரி பேக் மற்றும் டாப் என்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஸ்டார்க் நிறுவன முதலீடு..!
கடந்த ஆண்டு மின்சார வாகன நிறுவனமான ஸ்டார்க்-இல் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கணிசமான பங்குகளை வாங்கி இருக்கிறது. அதன்படி இரு நிறுவனங்கள் கூட்டணியில் புதிய மோட்டார் மோட்டார்சைக்கிள் மாடல் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இந்த திட்டம் அமலுக்கு வர அதிக காலம் ஆகும் என்றே தெரிகிறது.
சென்னையில் உற்பத்தி:
இதனிடையே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம், சென்னை அடுத்த ஒரகடத்தில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் புதிய மின்சார வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் முழுமையாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் எனவும், இரண்டாவது மின்சார வாகனம் ஸ்டார்க் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.