Nissan Patrol: சல்மான்கான் வாங்கிய குண்டுகள் துளைக்காத எஸ்.யு.வி.கார்..! சிறப்பம்சங்கள் என்ன?
பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாங்கியுள்ள நிஸ்ஸான் நிறுவனத்தின் புதிய பாட்ரோல் எஸ்.யு.வி. காரின் சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாங்கியுள்ள நிஸ்ஸான் நிறுவனத்தின் புதிய பாட்ரோல் எஸ்யுவி காரின் சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஒய்-பிளஸ் பாதுகாப்பு:
பல்வேறு தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் காரணமாக, பாலிவுட் நடிகர் சல்மான்கானிற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை மட்டும் நம்பிடாத சல்மான் கான், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது மேற்கொள்ளும் பயணங்களுக்காக இந்தியாவில் இதுவரை வெளியிடப்படாத நிசான் பாட்ரோல் எஸ்.யூ.வி.யை காரை, வெள்ளை நிறத்தில் வாங்கி இறக்குமதி செய்துள்ளார். ஏற்கனவே, கவசம் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடி கொண்ட கஸ்டமைஸ்ட் டொயோட்டா லேண்ட் குரூஸர் காரை வாங்கிய நிலையில், அதன் மேம்பட்ட வடிவமாக தான் த்ற்போது நிசான் பாட்ரோல் எஸ்யூவியை வாங்கியுள்ளார்.
காரின் இன்ஜின் விவரம்:
நிஸ்ஸான் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலான பாட்ரோல் SUV காரில், 5.6 லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது, இது 405 குதிரைகளின் ஆற்றலையும், 560Nm அதிகபட்ச இழுவிசையையும் வழங்கும். இந்த இன்ஜின் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு இல்லை:
Maruti Suzuki Brezza மற்றும் Hyundai Venue ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் Magnite SUV உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை மட்டுமே நிஸ்ஸான் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்கிறது. மேலும், எக்ஸ்-டிரெயில் உள்ளிட்ட புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அதன் முதன்மை மாடலான பாட்ரோல் எஸ்யூவி மாடல் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை.
விலை விவரம்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையில் அதிகம் பயன்படுத்தப்படும் கார்களில் ஒன்றாக நிஸ்ஸானின் பாட்ரோல் எஸ்யூவி மாடல் உள்ளது. இது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவில்லை என்றாலும், இதன் விலை AED 206,000 இலிருந்து தொடங்குகிறது. இது இந்திய சந்தையில் ரூ. 45.89 லட்சத்திற்கு சமம். அந்த விலையை கொடுத்து தான், சல்மான் கான் தனக்கான பாட்ரோல் காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார்.
காரணம் என்ன?
பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சல்மான் கானுக்கும், அவரது நோய்வாய்ப்பட்ட தந்தைக்கும் மற்றும் பிரபல பாலிவுட் எழுத்தாளர் சலீம் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்த பல்வேறு கொலை மிரட்டல்கள் காரணமாக தான் அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய லாரன்ஸ் பிஷ்னோய், தனது வாழ்க்கையின் லட்சியமே சல்மானை கொல்வது தான் என அறிவித்தார். அண்மையில் இந்தியில் எழுதிய இ-மெயில் ஒன்று வாயிலாகவும், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.