(Source: ECI/ABP News/ABP Majha)
MG Hector: எம்ஜி ஹெக்டர் கார்களை வாங்க இதுதான் சரியான தருணம்..! ரூ.1.37 லட்சம் வரை விலை குறைப்பு - காரணம் என்ன?
இந்தியாவின் முன்னணி எஸ்யுவி விற்பனையாளர்களில் ஒருவரான எம்.ஜி. நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் எம்.ஜி. நிறுவனம் தனது எஸ்.யு.வி., மாடல்களின் விலையை குறைத்து அறிவித்துள்ளது.
எம்.ஜி. ஹெக்டர் விலை குறைப்பு:
இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் எம்.ஜி., நிறுவனமும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக அந்நிறுவனத்தின் ஹெக்டர் மாடல்கள் பயனாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனது, டீசல் வெர்ஷன் எஸ்.யுவிக்களான ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் கார் மாடல்களின் விலையையும் எம்.ஜி. நிறுவனம் குறைத்துள்ளது. அதுதொடர்பான அறிவிப்பின்படி, குறைந்தபட்சமாக 27 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1.37 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பிற்கான காரணம்:
இந்திய சந்தையில் விலையை அதிகரிக்கும் நோக்கில் தான், இந்த விலைகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரணம், கடந்த மாதத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு மாடல்களையும் சேர்த்து மொத்தமாகவே 2000 யூனிட்கள் தான் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளன. அதேநேரம், ஹெக்டர் கார் மாடலின் போட்டியாளர்களாக உள்ள மஹிந்திராவின் XUV700 மற்றும் ஸ்கார்ப்பியோ N மாடல்கள் கடந்த மாதத்தில் சராசரியாக 6000-க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இதை கருத்தில் கொண்டு தான், எம்.ஜி., நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க, இரண்டு எஸ்.யு.விக்களில் விலையையும் குறைத்துள்ளது.
எம்.ஜி. ஹெக்டர் விலை விவரங்கள்:
விலை திருத்தத்திற்குப் பிறகு, ஹெக்டரின் தொடக்க விலை ரூ. 14.73 லட்சம் ஆகவும், அதிகபட்ச விலை ரூ.21.73 லட்சம் வரையிலும் உள்ளது. அடிப்படை பெட்ரோல் வேரியண்டின் விலை குறைந்தபட்சமாக ரூ.27,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.66,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டீசல் வேரியண்ட்களின் விலை இப்போது கணிசமாக குறைந்துள்ளது. குறைந்தபட்சமாக ரூ. 86,000 தொடங்கி, அதிகபட்சமாக் ரூ. 1.29 லட்சம் வரை எம்ஜி ஹெக்டரின் டீசல் வேர்யண்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி. ஹெக்டர் பிளஸ் விலை விவரங்கள்:
7 இருக்கைகள் கொண்ட ஹெக்டர் ப்ளஸ் மாடலின் விலை இன்னும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து டீசல் வேரியண்ட்களுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.1.04 லட்சம் தொடங்கி ரூ.1.37 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி இப்போது ரூ. 17.50 லட்சம் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.22.43 லட்சத்திற்கு விற்பன செய்யப்படுகிறது.
சந்தையில் ஹெக்டர்:
eம்.ஜ்., நிறுவனத்தின் இரண்டு SUV-க்களும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 143hp, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். அல்லது 6-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வரும் 170hp, 2.0-லிட்டர் டீசல் இன்ஜினை பெற்று இருக்கும். இந்திய சந்தையில் MG ஹெக்டர் மாடலுக்கு போட்டியாளர்களாக ருப்பது, டாடா ஹாரியர் , ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா XUV700 இன் 5-சீட்டர் மாடல்கள் தான். அதே நேரத்தில் ஹெக்டர் பிளஸ் மாடலுக்கு டாடா சஃபாரி , ஹூண்டாய் அல்கசார் மற்றும் 7-சீட்டர் XUV700 ஆகியவை போட்டியாக அமைந்துள்ளன.