Maruti Victoris: க்ரேட்டாவை தட்டித் தூக்குமா மாருதி விக்டோரிஸ் எஸ்யூவி? இன்று அறிமுகமான காரில் இவ்வளவு சிறப்பம்சங்களா.?
Maruti Suzuki Victoris: மாருதி நிறுவனத்தின் விக்டோரிஸ் எஸ்யூவி இன்று அதிகாரப்பூர்வமாக சந்தையில் அறிமுகமாகியுள்ளது. க்ரேட்டாவின் போட்டியாளராக கருதப்படும் இந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?

மாருதி சுசுகி நிறுவனம் தனது விக்டோரிஸ் எஸ்யூவி காரை இன்று அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹுண்டாய் க்ரேட்டாவிற்கு போட்டியாக கருதப்படும் இந்த காரில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன, புக்கிங் விவரங்கள் குறித்து தற்போது காணலாம்.
மாருதியின் புதிய எஸ்யூவி ‘விக்டோரிஸ்‘
மாருதியின் புதிய எஸ்யுவி கார் மாடல் இன்று இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் உற்பத்தியின் போது, Y17 என்ற குறியீட்டு பெயரை கொண்டிருந்த நிலையில், விக்டோரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னதாக இது எஸ்குடோ என்ற பெயரை பெறும் என தகவல் வெளியான நிலையில், மாருதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலேயே விக்டோரிஸ் என பெயரை குறிப்பிட்டு நீக்கியது இணையத்தில் வைரலானது. உடனடியாக அந்த பெயர் கூகுள் தேடலிலும் எதிரொலித்தது. இந்நிலையில், இன்று விக்டோரிஸ் காரை அதிகாரப்பூவமாக அறிமுகப்படுத்தியுள்ளது மாருதி நிறுவனம்.
5 ஸ்டார் ரேட்டிங்குடன் ‘விக்டோரிஸ்‘
மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) என்ற பெயரில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, பாதுகாப்பு விஷயத்தில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தன. ஆனால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தீவிர முயற்சிகளால், அதன் கார்கள், தற்போது மோதல் சோதனைகளில் (Crash Test) சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளன. இந்த வரிசையில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரும், பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பு நடத்திய மோதல் சோதனையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனையில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. எனவே, இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக, மாருதி சுஸுகி விக்டோரிஸ் திகழ்கிறது.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் இந்த கார் கொண்டுள்ளது.
விக்டோரிஸ் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன.?
மாருதி சுஸுகி விக்டோரிஸ் பாதுகாப்பானது என்பதுடன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியதாகவும் உள்ளது. மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வசதியை பெற்றுள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் விக்டோரிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அத்துடன், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸட்டர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அலெக்ஸா அஸிஸ்டன்ட் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் கொண்டுள்ளது.
மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பின் பகுதியில் வெண்ட்கள் உடன் ஆட்டோமேட்டிக் ஏசி, 60-க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகளுடன் சுஸுகி கனெக்ட் மற்றும் 8 ஸ்பீக்கர் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
மாருதியின் விக்டோரிஸின் என்ஜின் விவரங்கள்
மாருதி விக்டோரிஸ் காரில், ஃப்ரண்ட் வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options), மாருதி சுஸுகி விக்டோரிஸ் கொண்டுள்ளது. கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி என மொத்தம் 3 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
விக்டோரிஸ் காரின் வடிவமைப்பு
மாருதியின் அரேனா டீலர்ஷிப்களில் விற்பனை செய்யப்படும் இந்த புதிய விக்டோரிஸ் எஸ்யுவி, மாநருதி நிறுவனத்தின் ப்ரேஸ்ஸா மற்றும் க்ராண்ட் விட்டாரா மாடல்களுக்கு நடுவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரானது, மாருதியின் சர்வதேச சந்தைக்கான C- பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. க்ராண்ட் விட்டாரவிற்கு பயன்படுத்தப்பட்ட அதே கட்டமைப்பு ஸ்டைல் தான் இதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மானது, உற்பத்தி செலவுகளை குறைப்பதோடு, ஏற்கனவே க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடரில் நல்ல பலனை தரும் பல அம்சங்களை அப்படியே விக்டோரிஸ் கார் மாடலில் வழங்கவும் உதவுகிறது.
வடிவமைப்பில், நீள அடிப்படையில் க்ராண்ட் விட்டாராவை காட்டிலும் சற்றே கூடுதலாக விக்டோரிஸ் 4 ஆயிரத்து 345 மில்லி மீட்டர் இருக்கக் கூடும். இதன் மூலம் இந்த காரானது ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு நேரடியாக போட்டியாளராகிறது. செல்டோஸ், குஷக் மற்றும் டைகுன் ஆகிய கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் சந்தைக்கு வரவுள்ளதால், விக்டோரிஸ் கார் மாடலானது இடவசதி , அம்சங்கள் மற்றும் விலை ஆகியவற்றில் தனித்து நிற்க வேண்டியுள்ளது. கூடுதல் நீளமானது கூடுதலான பூட் ஸ்பேஸ் கொண்டு குடும்ப பயனாளர்களை இழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை விவரம் என்ன.?
மாருதி சுஸுகி நிறுவனம் விக்டோரிஸ் காரை தற்போது பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வந்துள்ளது. இதன் விலை எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் ஆரம்ப விலை அனேகமாக 10-11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே ஆகும். எனினும் கூடிய விரைவில், மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போதுதான் விலை எவ்வளவு? என்பது முறைப்படி அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.





















