Thar 5-door: மஹிந்திராவின் தார் 5 டோர் கார் - 3 வேரியண்ட்களில் களமிறக்க அதிரடி திட்டம்
Mahindra Thar 5-door: மஹிந்திரா தார் 5 டோரின் ஒவ்வொரு வேரியண்டும் வித்தியாசமான, வீல்களை கொண்டிருப்பது சோதனை ஓட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
Mahindra Thar 5-door: மஹிந்திரா தார் 5 டோர் கார் மூன்று வேரியண்ட்களில் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மஹிந்திரா தார் 5 டோர் கார்:
மஹிந்திராவின் தார் 5-டோர் காரானது தார் அர்மடா என்று அழைக்கப்படலாம் என கூறப்படுகிது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வாகனம் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தார் 5 டோர் மாடல் விரைவில் சந்தைக்கு கொண்டுவரப்பட இருப்பதை உறுதி செய்கின்றன.
தார் 5 டோர்- வித்தியாசமான வீல்கள்:
சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, தார் 5-டோர் மூன்று வித்தியாசமான வேரியண்ட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண்ட்ர் லெவல் வேரியண்டிற்கு எஃகு சக்கரங்களும், இடைநிலை வேரியண்டிற்கு ஐந்து-ஸ்போக் அலாய் வீல்களும், அதே சமயம் டாப் ஸ்பெக் வேரியண்டிற்கு 19-இன்ச் மல்டி-ஸ்போக் டயமண்ட்-கட் அலாய் வீல்களும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தார் 3 டோர் மாடலை காட்டிலும் புதிய கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், பின்புற வைப்பர் மற்றும் ரிமோட் மூலம் கையாளக்கூடிய எரிபொருள் டேங்கின் கேப் ஆகியவை புதிய 5 டோரில் அடங்கும். டாப் வேரியண்டில் சுற்றிலும் எல்ஈடி விளக்குகள் இடம்பெற்று இருக்கும். மேலும் டெயில்-லேம்ப்கள் 3-டோர் எடிஷனிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.
தார் 5 டோர் - உட்புற வசதிகள்:
டாப்-எண்ட் மாடலில் பழுப்பு நிற இருக்கைகள் இடம்பெறலாம். மஹிந்திரா தார் 3-டோர் போன்று முழுமையாக கருப்பு தீமில் இல்லாமல், பல்வேறு வித்தியாசமான தீம்கள் தார் அர்மாடா மாடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. XUV400 மாடலில் இருக்கும் ஒரு பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை சற்று மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, புதிய SUV-யில் பொருத்தப்பட்டுள்ளது. இது அடுத்து வரவிருக்கும் XUV300 ஃபேஸ்லிஃப்ட்டிலும் பயன்படுத்தப்பட உள்ளது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், முன் மற்றும் பின்புற மைய ஆர்ம்ரெஸ்ட்கள், ஒரு சன்ரூஃப் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் போன்ற பிற வசதிகளையும் கொண்டுள்ளது.
தார் 5 டோர் - இன்ஜின் விருப்பங்கள்:
ஸ்கார்பியோ N இன் 2.2-லிட்டர் டீசல் மற்றும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர் ட்ரெயின்களை, ஒரே மாதிரியான ஆற்றல் வெளியீடுகளுடன் தார் 5-டோர் கடன் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைஃப்ஸ்டைல் SUV ஆனது பரந்த அளவிலான வாங்குபவர்களை ஈர்க்கும் வகையில் 4WD மற்றும் 2WD ஆகிய இரண்டு விருப்பங்களுடனும் கிடைக்கும்.
விலை விவரங்கள்:
தார் 5-டோர் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும். இது XUV 3XO க்குப் பிறகு மஹிந்திராவின் பெரிய வெளியீடாக இருக்கும். Scorpio N உடன் ஒப்பிடும்போது தார் 5-டோரின் விலை சற்று அதிகமாக இருக்கும். அதாவது இதன்விலை சுமார் ரூ. 15 லட்சத்தில் தொடங்கலாம். இது மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும், ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோருக்கு போட்டியாக இருக்கும்.