7 Seater SUV: 140 கோடி பேர்னா சும்மாவா - கூட்டமா போக 7 சீட்டர், ஹைப்ரிட் பவரில் மிரட்டும் புதிய எடிஷன் - கார்களின் லிஸ்ட்
7 Seater SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 7 சீட்டர் எஸ்யுவிக்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

7 Seater SUV: இந்திய சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 7 சீட்டர் எஸ்யுவிக்களின் வெளியீட்டு தேதி மற்றும் விலை தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
7 சீட்டர் எஸ்யுவி கார்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 7 சீட்டர் எஸ்யுவி செக்மெண்ட் சீரான வேகத்தில் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எதிர்காலத்திற்கான நம்பிக்கைமிக்க பிரிவாக காட்சியளிக்கிறது. அதோடு, உலகிலேயே அதிக மக்கள் தொகை மற்றும் கூட்டுக் குடும்பம் கொண்ட நாடாக இருப்பதால், இந்திய கார் உற்பத்தியாளர்கள் 7 சீட்டர் எஸ்யுவி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் உள்நாட்டு சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள, 7 சீட்டர் எஸ்யுவி மாடல்களின் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி மற்றும் விலை தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மஹிந்திரா XUV700 ஃபேஸ்லிஃப்ட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிரபலமாக உள்ள XUV700 கார் மாடலின், மிட்-சைக்கிள் அப்டேடட் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அப்போது இதன் பெயர் XUV 7X0 என மாற்றப்படலாம் என கூறப்படும் நிலையில், சாலை பரிசோதனையில் ஏற்கனவே பல முறை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி, புதிய வெளிப்புற வடிவமைப்பு, உட்புற கேபினில் மூன்று டிஸ்பிளேக்கள் இடம்பெற உள்ளது. கூடுதலாக புதிய தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் இணைக்கப்பட உள்ளன. அதேநேரம், இன்ஜினில் மாற்றமின்றி 2.2 லிட்டர் mHawk டீசல் மற்றும் 2.0 லிட்டர் mஸ்டாலியன் பெட்ரோல் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளன. இவை 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. தற்போதைய சூழலில் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.18.31 லட்சத்தில் (ஆன் - ரோட்) தொடங்குகிறது. புதிய எடிஷனின் தொடக்க விலை ரூ.19 லட்சம் வரை அதிகரிக்கலாம்.
2. டாடா சஃபாரி பெட்ரோல்
டாடா சஃபாரியின் பெட்ரோல் எடிஷன் அறிமுகப்படுத்தப்படும் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், நடப்பாண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு ஆட்டோ -எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய 1.5 லிட்டர் tGDI 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் இணைக்கப்பட உள்ளது. புதிய பெட்ரோல் இன்ஜின் ஆனது,168bhp மற்றும் 350Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். அடுத்தடுத்து சாலை சோதனைகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இது விரைவில் சந்தைக்கு வரும் என உணர்த்துகிறது. தற்போதைய சூழலில் இந்த காரின் டீசல் எடிஷனின் விலை, சென்னையில் ரூ.19.33 லட்சத்தில் (ஆன் - ரோட்) தொடங்குகிறது. புதிய எடிஷனின் தொடக்க விலையும் ரூ.19 லட்சம் வரை அதிகரிக்கலாம்.
3. ரெனால்ட் போரியல்:
ரெனால்ட் நிறுவனத்தின் போரியல் 7 சீட்டர் எஸ்யுவி, இந்திய சந்தையில் அறிமுகமாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டாசிய பிக்ஸ்டர் அடிப்படையிலான இந்த கார், அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உள்நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். புதிய 3 வரிசை இருக்கைகளை கொண்ட காரானது, டஸ்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள CMF-B பிளாட்ஃபார்மை பயன்படுத்துகிறது. போரியலானது டஸ்டரை காட்டிலும் 230 மில்லி மீட்டர் கூடுதல் நீளமாகவும், 43 மில்லி மீட்டர் அதிகரிக்கப்பட்ட வீல்பேஸையும் பெறும். டஸ்டரில் உள்ள 154bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் போரியல் தொடர உள்ளது. அதோடு, 155bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷனும் இந்திய சந்தைக்கு பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் விலை ரூ.13 லட்சத்தில் தொடங்கி ரூ.18 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம்.
4. MG மெஜஸ்டர்
MG நிறுவனத்தின் மெஜஸ்டர் கார் மாடல் வரும் ஆக்ஸ்ட் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் க்ளோஸ்டர் கார் மாடலுக்கு இணையாக மெஜஸ்டர் விற்பனை செய்யப்பட உள்ளதாம். இது, வெளிநாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் மேக்சஸ் D90 SUV-யை பிரதிபலிக்கும் விதமாக, புத்துயிரூட்டப்பட்ட வெளிப்புற டிசைனை கொண்டிருக்கும். இதில் இடம்பெற உள்ள 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் ஆனது, 216bhp மற்றும் 479Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. ரியர் வீல்களுக்கு ஆற்றலை கடத்தும் விதமாக, 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸை பெறக்கூடும். க்ளோஸ்டரை போன்றே, 4 வீல் ட்ரைவ் செட்-அப்பை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட இந்த ஃபுல் சைஸ் எஸ்யுவியின் விலை, ரூ.45 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
5. ஹுண்டாய் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவி:
இந்திய சந்தைக்காக ஹுண்டாய் நிறுவனம் 7 சீட்டர் ஹைப்ரிட் எஸ்யுவியை தயாரித்து வருகிறது. இந்த புதிய 3 வரிசை எஸ்யுவி ஆனது மஹிந்திராவின் XUV700 மற்றும் டாடாடவின் சஃபாரி கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது. பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் அல்கசாருக்கு மேலே புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த காரானது வலுவான ஹைப்ரிட் சிஸ்டம் உடன் கூடிய 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டிருக்கும். இதே பவர்ட்ரெயின் தான் அடுத்த தலைமுறை க்ரேட்டாவிலும் இடம்பெற உள்ளது. வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாவிட்டாலும், 2027ம் ஆண்டில் இந்த காரை ஹுண்டாய் சந்தைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. சஃபாரியுடன் போட்டியிடுவதால், ஹுண்டாயின் புதிய 7 சீட்டரும் ரூ.20 லட்சம் வரை விலையை பெறலாம்.





















