Upcoming New Cars: பட்ஜெட்ல.. புதுசா 6 கார்கள், ரூ.10 லட்சத்தில் ஹைப்ரிட், எஸ்யுவி, EV எடிஷன் - லெவல் 2 ADAS டெக்
Upcoming Car Under 10 Lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming Car Under 10 Lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 6 கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் புதிய கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பேக்ட் செக்மெண்டில், போட்டித்தன்மை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணாகவே ஹைப்ரிட் பவ்ர்ட்ரெயின், மாடர்ன் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பயணத்தை மேம்படுத்த உதவும் உபகரணங்கள் ஆகியவற்றை சேர்ப்பதில் உற்பத்தியாளர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். விலை எல்லை ரூ.10 லட்சத்தை தாண்டாமலேயே, பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலும் கவனமாக உள்ளனர். இந்நிலையில் உள்நாட்டு சந்தையில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் காம்பேக்ட் பிரிவில் அறிமுகமாக உள்ள 6 கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய கார்கள்:
1. மாருதி சுசூகி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட்:
மாருதி சுசூகி நிறுவனம் ஹைப்ரிட் எடிஷன் ஃப்ராங்க்ஸ் கார் மாடலை விரைவில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கூபே கார் மாடலானது, ஸ்விஃப்ட் காரில் உள்ள 1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z12E பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. அத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஹைப்ரிட் சிஸ்டமானது, எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தவும், உமிழ்வுகளை குறைக்கவும் உதவும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த கார் ADAS தொழில்நுட்பத்தையும் பெறக்கூடும். எக்ஸ்டெர், நெக்சான், சோனெட், XUV 3XO, பிரேஸ்ஸா ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும் இந்த காரின் தற்போதைய விலை, சென்னையில் ரூ.9.21 (ஆன் - ரோட்) லட்சமாக உள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாக உள்ள ஹைப்ரிட் எடிஷனின் விலை ரூ.9.50 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் வரை நீட்டிக்கப்படலாம்.
2. டாடா பஞ்ச் EV ஃபேஸ்லிஃப்ட்
டாடா நிறுவனத்தின் மின்சார கார் மாடலான பஞ்சின், ஃபேஸ்லிப்ட் எடிஷன் நடப்பாண்டின் செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், வெளிப்புறத்தில் நுட்பமான மாற்றங்களை கொண்டிருக்கலாம். தொழில்நுட்ப அம்சங்களின் பட்டியலில் சில அப்டேட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விலைக்கு நிகரான மதிப்பு உயரும் என்பதோடு,காரின் ரேஞ்ச் உயருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். டாடா பஞ்சின் மின்சார எடிஷனின் தற்போதைய விலை, சென்னையில் ரூ.10.54 லட்சமாக (ஆன் - ரோட்) உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காரானது சிட்ரோயன் இசி3, நெக்ஸான், டியாகோ மற்றும் கோமெட் ஆகிய மின்சார எடிஷன்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
3. புதிய ஹுண்டாய் வென்யு
நடப்பாண்டு விழாக்காலகத்தில் புதிய தலைமுறை ஹுண்டாய் கார் மாடலை சந்தைப்படுத்த ஹுண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யுவி ஆனது, உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கூர்மையான டிசைன் அப்கிரேட்களை பெற உள்ளது. அதோடு, கேபின் லே-அவுட்டிலும் மாற்றங்கள் நிகழ்த்தப்பட உள்ளது. அதேநேரம் இன்ஜின் அம்சங்களில் எந்தவித மாற்றமுமின்றி, தற்போதுள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அப்படியே தொடர உள்ளது. அதேநேரம், பாதுகாப்பு அம்சங்களில் மிகப்பெரிய அப்கிரேடாக லெவல் 2 ADAS இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கியா சோனெட், மாருதி சுசூகி பிரேஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் மாருதி ஃப்ராங்க்ஸ் ஆகிய கார் மாடல்களிடமிருந்து, போட்டியை எதிர்கொள்ளும் வென்யுவின் தற்போதைய விலை சென்னையில் ரூ.7.94 லட்சத்தில் (ஆன் - ரோட்) தொடங்குகிறது.
4. மஹிந்திரா XUV 3XO EV:
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மின்சார கார் மாடலான XUV 3XO-வை வரும் ஆகஸ்ட் மாதம் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் மின்சார போர்ட்ஃபோலியோவில் XUV 400 கார் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட உள்ள புதிய காரானது, டாடா பஞ்சை சந்தையில் எதிர்கொள்ள உள்ளது. விரிவான தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் இல்லாவிட்டாலும், இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்
சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே வைரலான நிலையில், ஃபேஸ்லிப்ஃட் செய்யப்பட்ட கைகர் மாடலை விரைவில் சந்தைப்படுத்த ரெனால்ட் திட்டமிட்டுள்ளது. வெளிப்புறத்தில் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமின்றி, உட்புறத்தில் உபகரணங்கள் மற்றும்தொழில்நுட்ப அம்சங்களின் மேம்படுத்தல்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இன்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் அறிமுகமாகலாம் என கூறப்படும் இந்த காரானது நிசான் மேக்னைட், டாடா நெக்ஸான், வென்யு உள்ளிட்ட கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. இதன் விலை சென்னையில் ரூ.7.34 லட்சத்தில் (ஆன் - ரோட்) இருந்து தொடங்குகிறது.
6. நிசான் காம்பேக்ட் எஸ்யுவி:
ரெனால்ட் நிறுவனத்தின் ட்ரைபர் கார் மாடலின் அடிப்படையில், புதிய காம்பேக்ட் மல்வி பர்பஸ் வெஹைகிளை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிசான் நிறுவனம் சந்தைப்படுத்த உள்ளது. 1.0லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளெக்சிபில் சீட்டிங் அம்சங்களோடு, உட்புறத்தில் ஏராளமான நவீன அம்சங்களும் இடம்பெறக்கூடும். போட்டித்தன்மை மிக்க விலை நிர்ணயத்துடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















