Hyundai EV: வேற லெவல்! ஒரு முறை சார்ஜ் செய்தாலே 900 கி.மீட்டர் போகும் எலக்ட்ரிக் கார்! ஹூண்டாய் போட்ட மாஸ்டர் ப்ளான்!
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 900 கி.மீட்டர் தொலைவிற்குச் செல்லும் எலக்ட்ரிக் காரை வாகன சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும், எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தால் இயக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க முன்னணி வாகன தொழிற்சாலை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.
எலக்ட்ரிக் கார்கள்:
பொதுமக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் பைக் மற்றும் கார்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உலகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் சக்திகளை அதிகரிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அதிகரித்து வருகின்றனர். அதிக சக்தி கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் கார்களும் சந்தையில் விற்பனையாகி வருகிறது.
கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உலகம் முழுவதும் திகழும் ஹூண்டாய் கார் நிறுவனமும் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறது. உலகம் முழுவதும் வரும் 2030ம் ஆண்டிற்குள் 5.5 மில்லியன் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்று ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே 2 மில்லியனாக திட்டமிட்டுள்ளனர்.
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 900 கி.மீ.:
இதையடுத்து, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் மற்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 900 கிலோ மீட்டர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த கார் அறிமுகமானால் வாகன சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது.
2030ம் ஆண்டிற்குள் மொத்தம் 21 கார்களை குறைந்த பேட்டரி தயாரிப்பு செலவில் உருவாக்க முடிவு செய்துள்ளனர். உலகளவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் டெஸ்லா முன்னணியில் இருந்து வரும் நிலையில், இந்த காரின் வருகைக்கு பிறகு ஹூண்டாய் டெஸ்லாவிற்கு சவால் அளிக்கும் என்று ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது. இந்த கார் அறிமுகமானால் என்ன விலையில் வரும்? என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.