EV Range: அடிச்சு விடும் நிறுவனங்கள் - சொன்ன ரேஞ்சை தருகிறதா EV கார்கள், டாடா SCAM? ரோட் டெஸ்ட் விவரம்
EV Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உற்பத்தி நிறுவனங்கள் சொல்லும் அளவிற்கு, மின்சார வாகனங்கள் ரேஞ்ச் அளிக்கிறதா? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

EV Range: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் உற்பத்தி நிறுவனங்கள் சொல்லும் அளவிற்கு, மின்சார வாகனங்கள் ரேஞ்ச் அளிக்கிறதா? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களின் ரேஞ்ச்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு என்பது, தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது. அப்படி வாங்கப்படும் கார்களில் உற்றுநோக்கப்படும் அம்சங்களில், அவற்றின் ரேஞ்ச் என்பது மிகவும் முக்கியம். இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் (ARAI) ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சார வாகனமும் குறிப்பிட்ட ரேஞ்ச் திறனை பெறுகின்றன. ஆனால், மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான கார்கள் மட்டுமே அந்த திறனை சாலை பயன்பாட்டின் போது எட்டுகின்றன. அதன்படி, வெகுஜன சந்தையில் விற்பனை செய்யப்படும் சில முக்கிய மின்சார கார்கள், உண்மையில் நிஜ உலகில் என்ன ரேஞ்ச் வழங்குகிறது என்பதை ஆட்டோகார் இந்தியா எனும் நிறுவனம் பரிசோதித்துள்ளது. அதன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. டாடா டியாகோ EV
டாடா நிறுவனத்தின் மிகவும் சிறிய மற்றும் மலிவு விலை மின்சார காரான டியாகோ, 19.2kWh மற்றும் 24kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதில் உள்ள பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 275 கிலோ மீட்டர் தூர வரை பயணிக்க முடியும் என டாடா நிறுவனம் தரபில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நகர்புறம் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் ஓட்டப்பட்ட இந்த ஹேட்ச்பேக், 187 கிலோ மீட்டர் ரேஞ்சை மட்டுமே வழங்கியுள்ளது. அதாவது ஒரு kWh பேட்டரி திறனுக்கு 7.77 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கியுள்ளது. டியாகோ மின்சார எடிஷனின் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.11.14 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. MG கோமெட் EV
எம்ஜி நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை மின்சார வாகனமான கோமெட் 17.3kWh என்ற ஒரே ஒரு பேட்டரி பேக்கில் மட்டுமே கிடைக்கிறது. இதனை முழுமையாக சர்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு kWh திறனுக்கு 11.17 கிலோ மீட்டர் என மொத்தம் 193 கிலோ மீட்டர் ரேஞ்ச் மட்டுமே வழங்கும். இந்த பட்டியலில் உள்ள சிறிய பேட்டரி ஆப்ஷன் இதுவாக இருந்தாலும், வாகனத்தின் எடை குறைவு காரணமாக திறன் வாய்ந்த பேட்டரியாக உள்ளது. இதன் விலை ரூ.7.36 லட்சம் முதல் ரூ.9.86 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. சிட்ரோயன் eC3 EV
சிட்ரோயனின் 29.2kWh பேட்டரியுடன் ஃப்ரண்ட் வீல் மோட்டரை கொண்ட eC3 கார் மாடல், 246 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்பட்டது. ஆனால், நிகழ் உலகில் நகர மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் பயன்படுத்தியதில், மொத்தமாக 228 கிலோ மீட்டர் ரேஞ்சை மட்டுமே வழங்குகிறது. ஒரு kWh திறனுக்கு 7.8 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கிறது. இதன் விலை ரூ.12.9 லட்சம் முதல் ரூ.13.53 லட்சம் வரை நீள்கிறது.
4. டாடா பஞ்ச் EV
நாட்டில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றான, பஞ்சின் மின்சார எடிஷன் 25kWh மற்றும் 35kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது. இதில் உள்ள பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 365 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நிஜ உலகில் இது 229 கிலோ மீட்டர் ரேஞ்ச் மட்டுமே அளிக்கிறது. குறிப்பாக ஒரு kWh திறனுக்கு வெறும் 6.54 கிலோ மீட்டர் என்ற குறைவான ரேஞ்சை மட்டுமே வழங்குகிறது. இதன் விலை ரூ. 9.99 லட்சம் முதல் ரூ.14.44 லட்சம் வரை நீள்கிறது.
5. மஹிந்திரா XUV400 EV
டாடா நெக்சான் மின்சார எடிஷனுக்கு போட்டியான மஹிந்த்ராவின் XUV400 தற்போது 39.4kWh என்ற ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. நெடுஞ்சாலை அல்லாத பகுதிகளில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 456 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் இது வெறும் 251 கிலோ மீட்டர்ரேஞ்ச் மட்டுமே அளிக்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்ற இந்த காரின் விலை, ரூ.15.49 லட்சத்தில் தொடங்கி ரூ.17.69 லட்சம் வரை நீள்கிறது.
6. MG விண்ட்சர் EV
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமான காரானது ஸ்டேண்டர்ட் எடிஷனில் 38kWh பேட்டரி ஆப்ஷனையும், ப்ரோ எடிஷனில் 52.9kWh பேட்டரி ஆப்ஷனையும் பெறுகிறது. இதில் உள்ள ஸ்டேண்டர்ட் எடிஷன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 332 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நிஜ உலக பயன்பாட்டில் கிட்டத்தட்ட 308 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கி கவனத்தை ஈர்க்கிறது. ஒரு kWh திறனுக்கு 8.6 கிலோ மீட்டர் பயணித்து அசத்துகிறது. இந்த காரின் விலை ரூ.10 லட்சத்தில் இருந்தே தொடங்குகிறது.
7. MG ZS EV
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலான ZS, 50.3kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், நெடுஞ்சாலை பயன்பாட்டை கணக்கில் கொள்ளாமல் 461 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்குமென எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் 339 கிலோ மீட்டர் அதாவது ஒரு kWh திறனுக்கு 6.7 கிலோ மீட்டர் ரேஞ்சை மட்டுமே வழங்குகிறது. இதன் விலை ரூ.13 லட்சம் தொடங்கி ரூ.15.51 லட்சம் வரை நீள்கிறது.
7. டாடா நெக்ஸான் EV
டாடா நெக்ஸானின் மின்சார எடிஷனானது 30kWh, 40.5kWh மற்றும் 45kWh என மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 175, 390 மற்றும் 489 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என டாடா நிறுவனம் தெரிவித்தது. அதன்படி 45kWh பேட்டரி பேக்கை சோதித்ததில், நிஜ உலகில் வெறும் 350 கிலோ மீட்டர் ரேஞ்சை மட்டுமே வழங்கியது. இதன் விலை ரூ.12.49 லட்சத்தில் தொடங்கி ரூ.16.99 லட்சம் வரை நீள்கிறது.
8. டாடா கர்வ்
டாடா நிறுவனத்தின் மற்றொரு மின்சார எடிஷனான கர்வ் 45kWh மற்றும் 55kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.17.49 லட்சத்தில் தொடங்கி ரூ.21.99 லட்சம்வரை நீள்கிறது. பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 502 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில், வெறும் 365 கிலோ மீட்டர் ரேஞ்ச் மட்டுமே அளித்துள்ளது.
9. மஹிந்திரா BE 6
மஹிந்திரா நிறுவனத்தின் BE 6 கார் மாடலானது 59kWh மற்றும் 79kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெரிய பேட்டரி பேக் முழு சார்ஜில் 682 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், பேக் 3 எடிஷனானது வெறும் 449 கிலோ மீட்டர் ரேஞ்சை மட்டுமே வழங்கியுள்ளது. அதவாது ஒரு kWh திறனுக்கு 5.68 கிலோ மீட்டர் ரேஞ்ச் மட்டுமே வழங்குகிறது. 2 ஆயிரத்து 115 கிலோ எடையிலான இந்த காரானது, ரூ.18.9 லட்சம் தொடங்கி ரூ.26.9 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.





















