Electric Bike Fire Risk: தீப்பற்றி எரியும் இ- பைக்குகள்! : காரணங்களும் தீர்வுகளும்..
மின்னணு இருசக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வாகனங்கள் தீப்பிடித்து எரியும்போக்கு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, போரூரில் நேற்று இ- பைக் ஷோரூமில் சார்ஜிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 17 பைக்குகள் எரிந்து நாசமாகின. அதேபோல வேலூர் மாவட்டத்தில் அல்லாபுரம் சாலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இ- பைக் வெடித்ததில் தந்தை, மகள் இருவருமே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோலத் திருவள்ளூரில் விவசாயி ஒருவரின் இ-பைக் திடீரெனத் தீப்பிடித்து, எரிந்தது.
தமிழ்நாட்டில் மட்டுமே இந்த சம்பவங்கள் நடக்கவில்லை. புனே, குர்கான் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் இ - பைக்குகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
மின்னணு இருசக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வாகனங்கள் தீப்பிடித்து எரியும் போக்கு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணங்கள் குறித்துப் பிரபல ஆட்டோமொபைல் நிபுணர் டி.முரளி 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசினார். ''இப்போது மின்னணு இருசக்கர வாகனங்களின் தேவை அதிகமாக உள்ளது. எனினும் தரம், தீப்பிடிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட மைல்கல்களைக் கடந்து, பயணிக்க வேண்டியுள்ளது.
சந்தையில் கிடைக்கும் வரவேற்பால், காலங்காலமாக உள்ள நிறுவனங்கள் மின்னணு வாகனத் தயாரிப்பில் இறங்கியுள்ளன. எனினும் இவர்களின் அணுகுமுறையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் அணுகுமுறையும் வேறு வேறாக உள்ளது.
வழக்கமாகப் புதிய ரக பெட்ரோல் வாகன மாதிரிகள் உருவாக்கப்பட்டு, சந்தையில் விற்பனைக்கு வர சுமார் 60 மாதங்கள் ஆகும். இந்த நடைமுறை தற்போது சற்றே துரிதப்படுத்தப்பட்டிருப்பதால், 35 - 40 மாதங்களில் வண்டி வெளியாகிறது. இதில் 60 சதவீதக் கால அவகாசம் சோதனைக்கு (Testing) மட்டுமே தேவைப்படும். பள்ளத்தில் ஏறி இறங்குவது, மோசமான சாலைகளில் பயணிப்பது, தேங்கிய தண்ணீருக்குள் செல்ல வேண்டியது ஆகியவற்றை எதிர்கொள்ளும் திறன் சோதனைகள் (Endurance) நடத்தப்படும்.
அதேபோல மழை, வெயில், பனி என வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளிலும் உயரங்களிலும் பயணிக்கும் சோதனைகளில் வாகனங்கள் வெற்றி பெற வேண்டும். பாரம்பரியமான வாகன நிறுவனங்கள் இவை அனைத்தையும் முறையாகச் செய்தே, புதிய மாதிரி வண்டிகளைக் களமிறக்குகின்றன. ஆனால் இத்தகைய சோதனைகளை, ஸ்டார்ட் அப் மாதிரியான புதிய நிறுவனங்கள் முழுமையாக மேற்கொள்வதில்லை.
பேட்டரிகளில் நிகழும் விபத்து
பேட்டரிகளாலும் பேட்டரிகளிலும்தான் பெரும்பாலான தீ விபத்துகள் நடக்கின்றன. பேட்டரியின் இரு முனைகளிலும் ஆனோடு, கேத்தோடு இருக்கும். இரண்டுக்கும் நடுவில் எலக்ட்ரோலைட் இருக்கும். எலக்ட்ரோலைட் மூலமாகவே மின்சாரம் கடத்தப்பட்டு, தக்கவைக்கப்படும். இந்த செயல்முறையின்போதும், பேட்டரியை சார்ஜ் செய்யும்போதும் அதிக சூடாகும். பேட்டரிகளில் நிகழும் ரசாயன எதிர் வினைகளால், வெப்ப ஓட்டம் (Thermal Runway) ஏற்படுகிறது.
இ- பைக்குகளில் லித்தியம் - அயர்ன் வகை பேட்டரிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பாக ஸ்டார்ட் அப்கள் இந்த வகை பேட்டரிகளையே பைக்குகளில் பொருத்துகின்றன. இதற்குக் காரணம் அவை எளிதாக, சீனாவில் இருந்து கிடைக்கின்றன.
இ- கார்களுக்கு இந்தப் பிரச்சினை கிடையாதா என்ற கேள்வி எழலாம். கார்களில் பேட்டரிகளுடன் குளிர்விப்பான் அமைப்பு (Cooling System) தனியாக இருக்கும். இதனால் பேட்டரிகள் சூடாகாது. ஆனால் பைக்குகளில் இந்த வசதி இல்லாததால், சூடாகிறது. அதேபோல மின்சாரம் விட்டுவிட்டு வந்தாலும், வோல்டேஜ் அளவு அதிகமாகி பிரச்சினை ஏற்படும்.
தீப்பிடிக்க என்ன காரணம்?
* உற்பத்தி குறைபாடு (manufacturing defect)
* பேட்டரி வடிவமைப்பில் பிரச்சினை (design issue)
* தவறான பயன்பாடு (Improper Usage)
* முறையற்ற சார்ஜிங் (தவறான, குறைந்த மின்னணு வோல்டேஜ்களைக் கொண்ட வயர்களைக் கொண்டு சார்ஜ் செய்வதும் பேட்டரியை பலவீனமாக்கும்)
வெயில் காலத்தில் தீப்பிடிக்க வாய்ப்புண்டா?
வழக்கமாகவே வெயில் காலங்களில் சுற்றுப்புற வெப்பநிலை (ambient temperature) அதிகமாக இருக்கும். இதனால் தீப்பிடிப்பதற்கான வாய்ப்பு தூண்டப்படும்'' என்று முரளி தெரிவித்தார்.
பேட்டரிகளின் செயல்பாடு குறித்து தனியார் வாகன நிறுவனத்தின் ப்ரேக்கிங் பிரிவு மேலாளரான லோகேஷ் கூறும்போது, ''பேட்டரிகளில் மீண்டும் சார்ஜ் செய்ய முடியாத மற்றும் சார்ஜ் செய்யக்கூடிய இரண்டு வகைகள் உள்ளன. மின்னணு வாகனங்களில் பயன்படுவது மீண்டும் சார்ஜ் செய்ய முடியும் பேட்டரிகள். இதில் லெட் - ஆசிட் பேட்டரியும் லித்தியம் - அயர்ன் வகை பேட்டரியும் வாகனங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமான பெட்ரோல் வாகனங்களில் லெட் ஆசிட் பேட்டரி (Lead– acid) பேட்டரி பயன்படுத்தப்பட்டது.
லித்தியம் - அயர்ன் பேட்டரி
மின்னணு வாகனங்களில் லித்தியம் - அயர்ன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே வாகனங்களில் அறிமுகமாகி வெற்றிகரமாக இயங்கி வருவதாலும், மலிவான விலை என்பதாலும் லித்தியம் - அயர்ன் பேட்டரி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒகினவா நிறுவனத் தயாரிப்புகளில் 2 வகை பேட்டரிகளும் உள்ளன.
தயாரிப்பு மூலப்பொருள், தயாரிக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்து பேட்டரிகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் மின்னணு வாகனங்களுக்கான பேட்டரிகள் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய நிறுவனங்கள் கொடுக்கும் வடிவங்கள், பணத்தைப் பொறுத்து, அவற்றின் தரம் மாறுபடுகிறது.
தண்ணீர் புகுந்தாலும் பாதிக்காத வகையில்தான் பேட்டரிகள் வடிவமைக்கப்படுகின்றன. பேட்டரி தீப்பிடிக்க பேட்டரி வகை நிச்சயம் காரணமில்லை. அதன் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு முறையே காரணமாக அமைகிறது.
பேட்டரி மேலாண்மை அமைப்பு
ஒவ்வொரு மின்னணு வாகனங்களிலும் பிஎம்எஸ் எனப்படும் பேட்டரி மேலாண்மை அமைப்பு (Battery Management System) உள்ளது. இது பேட்டரி எவ்வளவு சார்ஜ் ஆகியுள்ளது? சார்ஜ் ஆக எடுத்துக்கொள்ளும் நேரம், வண்டி ஓடும்போது தீரும் பேட்டரி அளவு ஆகியவற்றைக் கண்காணிக்கும். இது பழுதானாலும் விபத்து ஏற்படலாம்.
பொதுவாக வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும்போது, அதில் துண்டிப்பு வெப்பநிலை (Cut-off temperature) இருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் சார்ஜ் ஆனபிறகும் தொடர்ந்து பேட்டரிக்கு வோல்டேஜ் செல்லாது. இந்த வெப்பநிலை சரியாக நிர்ணயிக்கப்படாத சூழலில், வோல்டேஜ் அதிகமாகி தீப்பிடிக்க வாய்ப்புண்டு.
எந்த ஒரு இயந்திரத்துக்கும் செயல்பாட்டு பாதுகாப்பு (Functional safety) என்பது அவசியம். இப்போதைய வாகனங்களில் மைக்ரோகன்ட்ரோலர் உள்ளிட்ட மின்னணு இயந்திரங்கள் (Electronic Equipments) அதிகம் உள்ளன. அதனால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்தவே இந்தப் பாதுகாப்பு அம்சம் தேவைப்படுகிறது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மின்னணு வாகனங்களில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளன. இது இன்னும் முறைப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல தீப்பற்றி எரிந்த பைக் தயாரிக்கப்பட்ட அதே நாள், அதே வாரத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் திரும்பப் பெற்று, பரிசோதித்து, சரிசெய்து தர வேண்டும். மத்திய அரசும் இதுகுறித்த சட்டங்களை உருவாக்கி வருகிறது'' என்று லோகேஷ் தெரிவித்தார்.
தீப்பிடிப்பதை எப்படித் தவிர்க்கலாம்? என்று ஆட்டோமொபைல் நிபுணர் டி.முரளி கூறியதாவது:
'' * வண்டிகள் நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் சூடாகி, தீப்பிடிக்கின்றன. இருக்கைக்கு அடியில் ஹெல்மெட்டை வைக்க ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அதில் ஹெல்மெட்டை மட்டுமே வைக்க வேண்டும், ஆனால் மக்கள் ஏராளமான பொருட்களை வைத்து நிரப்பி விடுகின்றனர். இதனால் காற்றுப் புக இடமில்லாமல், அதற்கு அடியில் உள்ள பேட்டரி விரைவில் சூடாகி விடுகிறது. இதனால் வண்டி பெட்டியில் பொருட்களை அடைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* அதேபோல கனமான பொருட்களை வைப்பதையும் தவிர்க்க வேண்டும். அவை மேடு - பள்ளத்தில் ஏறி இறங்கும்போது, கனம் தாங்காமல் அடியில் உள்ள பேட்டரியை அமிழ்த்தும். இதனால் பேட்டரியில் Short circuit ஏற்பட்டு மின்கசிவு உண்டாகி, தீப்பிடிக்கும். அதனால் அதையும் தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
* நீண்ட தூரப் பயணத்தால் பேட்டரி சார்ஜ் தீர்ந்திருக்கும். அப்போது உடனடியாக மீண்டும் சார்ஜ் செய்யக்கூடாது. சார்ஜ் செய்யும்போது பேட்டரி சூடாகும். இதனால் ஏற்கெனவே கொதித்துக் கொண்டிருக்கும் பேட்டரியை மீண்டும் சூடாக்குவதுபோல் ஆகிவிடும். அதனால் சிறிது நேரம் கழித்துதான் சார்ஜ் செய்ய வேண்டும்.
* இ-பைக்குகள் உடன் வழங்கப்படும் வழிகாட்டியை (Manual) கண்டிப்பாகப் படித்துப் பார்த்து, பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
* சூரிய ஒளி அதிகமாகப் படும் இடங்களில் இ-பைக்குகளை நிறுத்துவதை, முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
அரசு பின்பற்ற வேண்டியது என்ன?
பெரும்பாலான நிறுவனங்களின் பைக்குகள் ஆய்வகங்களில் நடக்கும் சோதனை ஓட்டங்களில் தேறிவிடும். ஆனால் உண்மையான சாலைகளில் பிரச்சினைகளைச் சந்திக்கும். அதனால் அரசு நேரடியாக நடைபெறும் சோதனை ஓட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
சூழலுக்கு உகந்த, குறைந்த மாசுபாட்டைக் கொண்ட, புதிய ரக மின்னணு வாகனங்களுக்கான தர நிர்ணயம் வருங்காலத்தில் இன்னும் அதிகமாகும்போது, தீப்பிடிக்கும் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்'' என்று முரளி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதற்கு மாற்றாகப் பொது மக்கள் மின்னணு இருசக்கர வாகனங்களை நாடிச் செல்கின்றனர். இந்த சூழலில், அவற்றின் தரத்தையும் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டியது அவசியம்.